சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (ஐஆர்ஏஎஸ்) சட்டவிரோதமாக பொருள்சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) மீட்புத் தொகையை ஏமாற்றிய ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள், ஒரு மாதம் ஏழு வாரச் சிறைத் தண்டனை மொத்தமாக விதிக்கப்பட்டது.
லிம் சிட் ஃபூ என்ற அந்த 43 வயது ஆடவர் ஆணையத்திடம் ஏறத்தாழ பத்து மாத காலமாக, $588,000 மதிப்புள்ள ஜிஎஸ்டி வரிக்கான மீட்புத் தொகையை ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அவர் ஏற்கெனவே உள்நாட்டு வருவாய் ஆணையத்தை $11.8 மில்லியன் மதிப்புள்ள தொகையை ஏமாற்றிய குற்றத்துக்கு 2022ஆம் ஆண்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
சிறையில் இருந்து 2023ஆம் ஆண்டில் விடுதலையாகிய சிறிது காலத்தில் அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
நன்னடைத்தைக் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டு 2024 ஆகஸ்ட் மாதம் தொடங்கி, 2027 செப்டம்பர் மாதம் வரை காவல்துறைக் கண்காணிப்பில் இருந்த நிலையில் அவர் மீண்டும் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனையோடு $781,000 அபராதத் தொகையைச் செலுத்தும்படியும் விதித்துள்ளது.
காவல்துறையின் கண்காணிப்புக் கால விதிமுறை மீறப்பட்டு மேலும் குற்றங்கள் நடந்துள்ளதால் கூடுதலாக 69 வாரங்கள் சிறைத் தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.
பொருள் சேவை வரி சார்ந்த $260,000 மதிப்புள்ள 14 குற்றங்களையும் குற்றச்செயலால் ஈட்டியவற்றை கையாண்ட ஒரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மீதம் உள்ள பணம் சம்பந்தப்பட்ட 29 கூடுதல் குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
விவரம் வெளியிடப்படாத மனிதவள குற்றத்துக்காக லிம் கடந்த 2012ல் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
அச்சிறைவாசத்தில் இருந்து விடுதலையானவர் 200 போலியான நிறுவனங்களைப் பதிவுசெய்து ஆணையத்திடம் பொருள் சேவை வரி மீட்புத் தொகைக்கான மானியங்களுக்கு விண்ணப்பம் செய்து அந்த $11.8 மில்லியன் தொகையை ஏமாற்றி பெற்றார்.
