சிங்கப்பூரில் சொந்த கடன் வசூலிப்பு நிறுவனங்களிலிருந்து ஏறக்குறைய $976,000 தொகையைக் கொள்ளையடித்த ஆடவருக்கு 81 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று கடன் வசூலிப்பு நிறுவனங்களைத் தோற்றுவித்த 37 வயது ஃபார்ம் பூன் டெட், அவற்றுள் இரண்டிலிருந்து 90க்கும் அதிகமான முறை பணத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், கணவருடன் இணைந்து அரிய பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தை நடத்தி வந்த பெண்ணுக்குச் சொந்தமான $280,000 ரொக்கப் பணத்தையும் ஃபார்ம் களவாடினார்.
மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான ஃபார்ம், நம்பிக்கை மோசடி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஃபார்ம்மிற்கான தீர்ப்பின்போது வேறு ஏழு குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.
எம்பயர் டெப்ட் கலெக்ஷன், எம்பயர் டிசி ஹோல்டிங்ஸ், எம்பயர் எஸ்ஜி டெப்ட் ரெக்கவரி ஆகிய ஃபார்மின் மூன்று நிறுவனங்களும் 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்டன.
கடன் வசூலிப்புச் சேவைகளை மேற்கொள்ளத் தேவையான உரிமங்களைப் பெற முடியாததால் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இயக்குநர்களாகவும் இருக்கும்படி ஃபார்ம் தமது நண்பர்களை ஈடுபடுத்தினார்.
அதையடுத்து நிறுவனத்தின் ஊழியராக மாறிய அவர், புதியவர்களைப் பணியமர்த்துவது, பணப் பரிவர்த்தனைகளைக் கையாள்வது போன்ற அன்றாடப் பணிகளைப் பார்த்துக்கொண்டார்.
2023ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் 2025ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் இடையில் ஃபார்ம் மற்றோர் ஆடவருடன் இணைந்து எம்பயர் டெப்ட் கலெக்ஷன், எம்பயர் டெப்ட் ரிக்கவரி ஆகிய நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட $976,000ஐக் கையாடல் செய்ய திட்டமிட்டதாக நீதிமன்றத்திடம் கூறப்பட்டது.
தமது நடத்தைக்கு முழு பொறுப்பு ஏற்பதாகக் கூறிய ஃபார்ம், மீண்டும் அத்தகைய தவற்றைச் செய்யப்போவதில்லை என்று உறுதிகூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஃபார்மின் பிணைத் தொகை $20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரது சிறைத் தண்டனையை நவம்பர் 13ஆம் தேதி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
