மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பதுக்கி வைப்பதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க தனது தந்தை உட்பட மூன்று பேரை வேலைக்கு அமர்த்திய ஆடவர் ஒருவருக்கு வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 3) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த வங்கிக் கணக்குகளில் 1.3 மில்லியன் வெள்ளிக்கு அதிகம் பதுக்கியதற்காக 36 வயது திமத்தி பேட்ரிட் சாலமனுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கூட்டுச்சதியில் ஈடுபட்ட குற்றத்தை திமத்தி, மார்ச் மாதத்தின்போது ஒப்புக்கொண்டார்.
இதற்காக திமத்தி ஆள்சேர்த்த நால்வரில் ஒருவரான அவரது தந்தை 64 வயது பேட்ரிக் லூர்துசாமிக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பேட்ரிக்குடன் இந்தச் சதியில் ஈடுபட்ட அவரது நண்பர் 53 வயது காமராஜ் கோபாலுக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தவறான முறையில் பெறப்பட்ட பணத்தைக் கையாண்ட குற்றத்தை பேட்ரிக்கும் காமராஜும் ஒப்புக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது நபரான 40 வயது டேனியல் லார்ஸ் ஸ்டீவன்சன் மீது நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.
அந்த ஆடவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
2017க்கும் 2018க்கும் இடையே, ஹேரி டர்னர் என்ற ஆடவரை போட் கீ வட்டாரத்திலுள்ள மதுக்கூடத்தில் திமத்தி சந்தித்தார். நிதித்துறையில் ஆலோசனைச் சேவைகள் வழங்கும் திட்டத்தில் சேர அந்த ஆடவர், திமத்தியை அழைத்தார்.
பேட்ரிக், காமராஜ், ஸ்டீவன்சன் ஆகியோரைத் தன்னுடன் திமத்தி சேர்த்துக்கொண்டார்.
ஹேரியுடனான இந்த ஏற்பாட்டின் சந்தேகத்திற்குரிய தன்மையை திமத்தி அறிந்திருந்தபோதும் தொடர்ந்து அதற்கு உடந்தையாக இருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஜேசன் சுவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திமத்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.