எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாம் சந்தித்த ஒருவரை வெறுத்த சுவா வாங் செங், அவரின் விவரங்களைக் கொண்டு போலியான சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கி, இஸ்லாமிய சமயத்துக்கு எதிரான உள்ளடக்கத்தையும் யூடியூப் காணொளிகளையும் பதிவிட்டார்.
சுவாவின் செயல்களால் குறைந்தது இருமுறையாவது காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்த நபர், மனரீதியாக பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சுவாவுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 23) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொந்தரவு தருவதிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் முஸ்லிம்களின் சமய உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்கில் உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததாக இரு குற்றச்சாட்டுகளையும் சுவா, 33, முன்னதாக ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிப்பதில் மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
அந்தக் காணொளிகளை சுவா தயாரிக்காவிடிலும், முஸ்லிம் ஃபேஸ்புக் பயனர்களின் சமய உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்கில் அவற்றை அவர் பகிர்ந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் காரணமாக, பாதிக்கப்பட்டவரின் பெயர் வெளியிடப்படவில்லை. 2011ல் தேசிய சேவையின்போது சுவா அவரை முதன்முதலில் சந்தித்தார்.