ஆறு வயதுச் சிறுவனை அறைந்ததற்காக 39 வயது ஆடவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்கேட் மால் கடைத்தொகுதியில் கடந்த 2024 டிசம்பர் 22ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது.
வேண்டுமென்றே காயம் விளைவித்தக் குற்றத்தை ஆடவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
சம்பவ நாளன்று கடைத்தொகுதிக்கு ஆடவரும் அவரின் மனைவியும் தங்கள் மூன்று மகள்களுடன் குடும்பத்தோடு சென்றிருந்தனர்.
அச்சிறுமியரில் ஒருவர் கடைத்தொகுதியில் உள்ள சிறார் விளையாட்டுத் தளம் ஒன்றில் விழுந்துவிட்டாள். சிறுவன் ஒரு தற்காலிகச் சுவரை உதைத்த காரணத்தால்தான் அவள் விழ நேரிட்டது என்பதால் ஆடவர் அவனை அறைந்தார்.
அவ்வாறு செய்தது தேவையற்ற செயல் என்று நீதிபதி கருத்துரைத்தார்.
ஆடவர் அறைந்ததால் சிறுவனின் முகத்தில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதோடு, சம்பவத்துக்குப் பிறகு அவன் மிகவும் அமைதியாகிவிட்டதாகவும் தூக்கத்திலிருந்து அடிக்கடி திடுக்கிட்டு எழுந்ததாகவும் அறியப்படுகிறது.
சிறுவயது என்பதால் ஆடவரின் மகள் மற்றும் சிறுவனின் பெயர்களை வெளியிட சட்டப்படி அனுமதியில்லை.