மோசடி வழக்கு ஒன்றில் தமது கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமது இரட்டைச் சகோதரரின் கடப்பிதழைப் பயன்படுத்திப் பலமுறை சாலை வழியாக நாட்டைவிட்டு வெளியேறிய ஆடவர்க்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பதால், சோதனைச்சாவடிகளில் அடையாளச் சோதனைக்கு அனுப்பப்படும் வாய்ப்பு குறைவு என ஜோனத்தன் யாம் ஸே லியாங், 27, நம்பினார். தமது சகோதரர் தடுத்தபோதும் அவர் தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்டார்.
சிங்கப்பூர்க் கடப்பிதழைத் தவறாகப் பயன்படுத்தியது, கணினித் தரவுகளில் அங்கீகாரமின்றி மாற்றம் செய்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு நவம்பர் 17 தேதி தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு பதின்மூன்று மாதங்களும் நான்கு வாரங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2025 ஜனவரி ஆறாம் தேதி வாடகைக் காரில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குச் சென்ற யாம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியிடம் சகோதரரின் கடப்பிதழைக் கொடுத்து, அதிகாரி சகோதரரின் பெயரை அழைத்தபோது பதிலளித்தார்.
பின்னர் சகோதரர்க்குத் தெரியாமல் மேலும் ஐந்து முறை அவ்வாறு மலேசியா சென்றார். ஒரே அறையில் தங்கியிருந்த சகோதரரின் கடப்பிதழை அவர் ரகசியமாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.
இறுதியில், 2025 ஜனவரி 22ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியின் தானியக்கத் தடத்தில் அங்க அடையாளங்கள் பொருந்தாததால் அவர் பிடிபட்டார்.
இதற்கிடையே, ‘தி காஃபி பீன் அண்ட் டீ லீஃப்’ நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியாகப் பணியாற்றியபோது, விற்பனையிட அமைப்பில் ஊடுருவி 810 வெள்ளி மதிப்பிலான புள்ளிகளைத் தமது உறுப்பினர் அட்டைகளில் ஏற்றியதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூர்க் கடப்பிதழைத் தவறாகப் பயன்படுத்துவோர்க்கு 10,000 வெள்ளி வரை அபராதம், பத்தாண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். கணினித் தரவுகளில் அனுமதியின்றி மாற்றம் செய்வோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம், மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
