காவல்துறையினரிடம் பொய் கூறிய ஆடவருக்குச் சிறை

காவல்துறையினரிடம் பொய் கூறிய ஆடவருக்குச் சிறை

2 mins read
9744f398-e71d-4514-beb5-a671a2867151
அரசாங்க ஊழியர் ஒருவரிடம் பொய்த் தகவல் கூறியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிறகு, சாய் வென் ஹின்னுக்கு இரண்டு நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: பிக்சாபே

மற்றொரு வாகனம் தனது வாகனத்தை மோதியபோது, அதற்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவர் காவல்துறையினரிடமும் மருத்துவரிடமும் பொய் சொல்லியிருந்தார்.

விபத்தினால் தனது கழுத்து காயமடைந்ததாக காப்புறுதி கோரிக்கை அறிக்கை ஒன்றிலும் அவர் பொய்த் தகவல் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்க ஊழியர் ஒருவரிடம் பொய்த் தகவல் கூறியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சாய் வென் ஹின் என்ற அந்த ஆடவருக்கு இரண்டு நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி பார்க் கிரசென்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்திற்குப் பின்னால் 29 வயது சாய் நின்றுகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது திரு ஹோ ஜின் சேம், 72, என்பவர் தனது வாகனத்தை நேர்மாறாக ஓட்டி, சாயின் நிறுத்தப்பட்ட வாகனத்தை மோதியதாகவும், அவர் தனது தொலைபேசி எண்ணை சாயிடம் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

அதற்கு மறுநாள், சாய் மருத்துவரைப் பார்க்கச் சென்றார். அவருக்கு நான்கு நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. விபத்து நேர்ந்தபோது வாகனத்தில் இருந்ததாக அவர் மருத்துவரிடம் கூறினார்.

விபத்துக்குப் பிறகு கழுத்தில் வலி ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அதன் பிறகு, காவல் நிலையத்திற்குச் சென்று, விபத்து குறித்து புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து, தனது வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக திரு ஹோவுக்கு எதிராகக் காப்புறுதிக் கோரிக்கையைக் தொடுக்க, அவர் பொதுக் காப்புறுதிச் சங்கத்திடம் விபத்து குறித்து புகார் செய்தார்.

கண்காணிப்புக் கருவிகளிலிருந்து பெறப்பட்ட படங்கள், விபத்தின்போது சாய் வாகனத்திற்கு வெளியே இருந்ததைக் காட்டின.

அரசாங்க ஊழியர் ஒருவரிடம் பொய்த் தகவல் தெரிவித்ததற்கு, சாய்க்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்