சிங்கப்பூரில் தான் பிணைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பெண்ணை நம்பிய ஆடவர் $3,999 பணத்தை இழந்துள்ளார்.
‘டிக்டாக்’ காணொளியைப் பார்த்து அந்த 49 வயது ஆடவர் மோசடிக்கு ஆளானதாக ஷின்மின் டெய்லி நாளேடு சனிக்கிழமை (டிசம்பர் 27) தகவல் வெளியிட்டுள்ளது.
ஆடவரின் குடும்பப் பெயர் லின் என்றும் அவர் குளிரூட்டிப் பராமரிப்புத் தொழில்நுட்பர் என்றும் கூறப்பட்டது.
டிசம்பர் 16ஆம் தேதி, ‘டிக்டாக்’ காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்குச் சீனாவின் குவாங்டோங் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட பெண்ணிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
சிங்கப்பூர் வந்த மூன்று மாதங்களில் முதலீட்டு மோசடியில் தான் $20,000 இழந்ததாக அந்தப் பெண் கூறினார். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த இயலாததால் தன் ‘முதலாளி’ தன்னைப் பிணைபிடித்து வைத்திருப்பதாகவும் சொன்னார்.
தொடக்கத்தில் பணம் கேட்ட அவரின் கோரிக்கைக்குச் செவிமடுக்காத லின், பெண்ணின் அழுகையைக் கேட்டும் கடனை அடைத்தால் காதலிப்பதாக உறுதிகூறியதைக் கேட்டும் அப்பெண் மீது இரக்கம் கொண்டார்.
பின்னர் ‘வாட்ஸ்அப்’பில் தொடர்புகொண்டபோது அந்தப் பெண் ஹாங்காங் தொலைபேசி எண்ணில் பேசுவதை அறிந்த லின், பலமுறை கேட்டுக்கொண்டும் காணொளி மூலம் உரையாட அந்தப் பெண் மறுத்துவிட்டதாகச் சொன்னார்.
டிசம்பர் 20ஆம் தேதி, அமோய் ஸ்திரீட்டில் உள்ள முகவரி ஒன்றில் பணத்தைச் செலுத்திவிட்டுப் பெண்ணை அழைத்துச் செல்லும்படி ‘முதலாளி’யிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. லின், மொத்தம் $3,999 பணப்பரிமாற்றம் செய்த பிறகு மேலும் $3,000 அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். சந்தேகம் எழவே அவர் காவல்துறை உதவியை நாடினார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்துப் புகாரளிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய காவல்துறை, விசாரணை தொடர்வதாகக் குறிப்பிட்டது என்று ‘ஏஷியாஒன்’ செய்தித்தளம் கூறியது.

