கடன் அட்டை விவரங்கள் திருட்டு மோசடியில் சிக்கி $3,456 பணத்தை இழந்த வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் தோல்வியடைந்துள்ளார். வங்கி அனுப்பிய தொடர் எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெற்ற பிறகும் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அந்த இழப்புக்கு அவரே முழுப் பொறுப்பு என்று சிறு கோரிக்கை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த மோசடிச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட நபர் டிக்டாக் தளத்தில் விளம்பரம் ஒன்றைப் பார்த்து, ஒரு பொருளை வாங்க முயன்றபோது தமது கடன் அட்டை விவரங்களை ஒரு இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் பிறகு, அவரது அட்டை ‘ஆப்பிள் பே’ கணக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறி, வங்கியிடமிருந்து ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் மற்றும் பல எச்சரிக்கை குறுந்தகவல்கள் அவரது கைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தாம் ‘ஆப்பிள் பே’ பயன்படுத்துவதில்லை என்பதால், அந்த அறிவிப்புகளை அவர் முற்றிலும் அலட்சியப்படுத்தியுள்ளார். இந்த அலட்சியத்தைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் ஒரு வாரக் காலத்துக்குள் ‘சுய்கா’, ‘பாஸ்மோ’ உள்ளிட்ட ஜப்பானிய மின்னணு பணப்பைகளில் 22 முறை பணத்தை நிரப்பி, மொத்தம் $3,811.72 மதிப்பிலான மோசடிப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர்.
$500க்கும் மேல் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அறிவிப்பு வருமாறு அட்டையின் கட்டமைப்பு இருந்ததால், இந்தத் தொடர் திருட்டுகள் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் போயின. சிறு கோரிக்கை நடுவர் மன்றம் இந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தது. வங்கியின் தொடர் எச்சரிக்கைகளைப் புறக்கணித்த வாடிக்கையாளரின் நடத்தை, கவனக்குறைவின் உச்சக்கட்டம் என்றும் அட்டை ஒப்பந்த விதிகளின்படி இந்த இழப்பை அவரே ஏற்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

