முன்னறிவிப்போ சம்பளமோ இன்றி ஓய்வு பெற வைக்கப்பட்ட ஆடவருக்கு இழப்பீடு

முன்னறிவிப்போ சம்பளமோ இன்றி ஓய்வு பெற வைக்கப்பட்ட ஆடவருக்கு இழப்பீடு

2 mins read
380e4bd6-0613-4a3f-819b-409d9f5c9d88
மறுவேலைவாய்ப்பு குறித்துக் கேட்டபோது, அந்த ஆடவருக்குக் குறைவான சம்பளத்தில் ஆறு மாதக் கால வேலை மட்டுமே வழங்கப்பட்டது. - மாதிரிப் படம்: பிக்சாபே

ஆடவர் ஒருவர் 63 வயது பூர்த்தியான மூன்று மாதங்களில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது, சிங்கப்பூரின் சட்டபூர்வ ஓய்வுபெறும் வயது அது என்பதால், சட்டபடியே அவரை ஓய்வுபெற வைப்பதாக அவரது நிறுவனம் கூறியிருந்தது.

அதனால், பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் பகுதி மேலாளர், நிறுவனத்திற்கு எதிராக வேலை கோரிக்கை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அவர் முறையற்ற பணிநீக்கத்திற்கு S$11,600, வேலைவாய்ப்பு உதவித் தொகையாக S$14,750 என மொத்தம் S$26,350 இழப்பீடு கோரினார்.

இருப்பினும், அவரது நிறுவனம் அந்த இரண்டு கோரிக்கைகளையும் எதிர்த்தது. அந்த ஆடவரை ஓய்வுபெற வைத்ததால் அந்தப் பணிநீக்கம் சட்டபடியானது என்றும், அத்தகைய சூழ்நிலையில் அவருக்கு எவ்வித முன்னறிவிப்போ அதற்குப் பதிலாக வழங்கப்படவேண்டிய சம்பளமோ தேவையில்லை என்றும் அது வாதிட்டது.

மேலும், அவருக்கு மறுவேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவரே அதை நிராகரித்ததால் வேலைவாய்ப்பு உதவித் தொகை எதையும் வழங்கத் தேவையில்லை என்றும் அந்நிறுவனம் கூறியது.

திங்கட்கிழமை (ஜூலை 13) வெளியான தீர்ப்பில், நடுவர் மன்ற நீதிபதி ஜோயல் டான் அந்த ஓய்வுபெற்ற ஊழியருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தார். அவர் கோரிய முழு தொகையான S$26,350ஐயும் அவருக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஓர் ஊழியர் ஓய்வுபெறும் வயதை எட்டிய பிறகு, அவரது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் நிறுவனம், ஒப்பந்தத்திலும் வேலைவாய்ப்புச் சட்டத்திலும் குறிப்பிட்டுள்ளபடி, முன்னறிவிப்பு அல்லது அதற்குப் பதிலாக வழங்கப்படவேண்டிய சம்பளத்தை அளிக்க வேண்டும் என்று திரு டான் தெரிவித்தார்.

மறுவேலைவாய்ப்பு குறித்து அந்த ஊழியரிடம் நிறுவனம் முறையான கலந்தாலோசனையையோ பேச்சுவார்த்தையையோ நடத்தவில்லை என்பதால், நிறுவனம் மேற்கொண்ட மறுவேலைவாய்ப்பு நடைமுறையில் குறைபாடு உள்ளதைத் திரு டான் கண்டறிந்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அந்த ஊழியருக்கு ஆறு மாதக் கால மறுவேலைவாய்ப்பு ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பணி ஓய்வு, மறுவேலை நியமனச் சட்டத்தின்படி, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டாலொழிய, பொதுவாக ஓராண்டுக் கால மறுவேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்