ஈசூனைச் சேர்ந்த 41 வயது ஆடவர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரிடம் விற்பதற்காக எட்டோமிடேட் கலந்த கேபோட்ஸ் கருவிகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
முகமது அகில் அப்துல் ரஹிம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது கழக வீட்டில் பிடிபட்டார். அவரிடம் 70க்கும் மேற்பட்ட கேபோட்ஸ் கருவிகளில் நிரப்புவதற்குத் தேவையான வெள்ளை பொடி வடிவத்தில் எட்டோமிடேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்புக் காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ள அகிலுக்கு இம்மாதம் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்.
சிங்கப்பூரரான அகிலின் கடப்பிதழை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தபோதும் காதலியைப் பார்க்க மலேசியாவுக்குச் செல்ல அவர் முயன்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரியில் அடையாள அட்டையையும் கடப்பிதழையும் கொண்ட பையைக் காப்பிக் கடையில் வைத்ததாக குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் பொய் தகவலையும் அகில் அளித்தார்.
அவரது அட்டை மட்டும் பின்னர் திரும்பக் கொடுக்கப்பட்டதாக அகில் கூறினார்.
அதையடுத்து அகிலுக்குக் கொடுக்கப்பட்ட புதிய கடப்பிதழ் மூலம் பிடிபடும்வரை அவர் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.
சிங்கப்பூரில் நச்சுச் சட்டத்தின்கீழ் எட்டோமிடேட் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களிலும் மட்டும் அது மயக்க மருந்தாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அளவுக்கு அதிகமாக எட்டோமிடேட் மருந்தை எடுப்பது ஒருவித தசைப் பிடிப்பு, நடுக்கம், மனக் குழப்பம், மந்தநிலை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
கடந்த மாதம் 30ஆம் தேதி உள்துறை அமைச்சர் க. சண்முகம் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் எட்டோமிடேட் தொடர்பான குற்றங்களைக் களைய உதவும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் முயற்சிகளில் உதவுவர் என்று அறிவித்தார்.
சுகாதார அமைச்சு எட்டோமிடேட்டை, போதைப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் சி பிரிவில் வகைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சு, கேபோட்ஸ் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைக் குறித்து கூடுதலாக ஆராய்கிறது.