67 வயது ஆடவருக்கு மரணம் விளைவித்தவருக்குச் சிறை, பிரம்படி

67 வயது ஆடவருக்கு மரணம் விளைவித்தவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
f971e7ab-ec18-4f4e-a2af-01ac3e441471
41 வயது சுபிர் முகமது தாக்கியதில் 67 வயது சிவராஜூ பிச்சை பிள்ளை கடுமையாகக் காயமடைந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கேலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு சண்டை தொடர்பில் 41 வயது ஆடவருக்கு 12 பிரம்படிகளுடன் ஆறு ஆண்டு, 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நிகழ்ந்த சண்டையில் 41 வயது சுபிர் முகமது தாக்கியதில் 67 வயது சிவராஜூ பிச்சை பிள்ளை கடுமையாகக் காயமடைந்தார்.

சம்பவ நாளன்று கேலாங் வட்டாரத்திற்குச் சட்டவிரோத மாத்திரைகள் வாங்க மனைவியுடன் சென்றிருந்த சுபிர், டான் என்ற ஆடவரிடமிருந்து இலவச இறுமல் மருந்தைப் பெற முற்பட்டார்.

சுபிரின் கோரிக்கையைத் டான் மறுத்ததை அடுத்து இறுமல் மருந்தை வாங்கத் திரு சிவராஜூ சுபிருக்கு $20 பணம் கொடுத்தார்.

அதன் பிறகு தம்மிடமிருந்த சில மாத்திரைகள் குறித்து திரு சிவராஜூ சுபிரிடம் பேசினார். சுபிர் தனது சட்டைப் பையைத் தொட்ட பிறகு அந்த மாத்திரைகளைக் காணவில்லை என்று திரு சிவராஜூ கூறினார்.

இது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மூண்டது. மாத்திரைகளை எடுக்கவில்லை என்று கூறிய சுபிர், திரு சிவராஜூவைத் தாக்கத் தொடங்கினார்.

கைத்தடியை ஊன்றி நடக்கும் திரு சிவராஜூவைச் சுபிர் கீழே தள்ளிவிட்டதில் அவரது தலையில் அடிபட்டதுடன் காது, வாய், மூக்கு ஆகியவற்றிலிருந்தும் ரத்தம் கசியத் தொடங்கியது.

சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு சிவராஜூவின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் குணமடைந்தாலும் படுத்த படுக்கையாகதான் இருப்பார் என்று மருத்துவர் கூறிவிட்டனர்.

அவரது குடும்பத்தினர் செயற்கை சுவாசக் கருவியை நிறுத்த முடிவெடுத்ததை அடுத்து திரு சிவராஜூ உயிரிழந்தார்.

இதற்கிடையே, திரு சிவராஜூ தம்மிடம் போதைப் பொருள் விற்க முற்பட்டதாகவும் தாம் அதை வாங்க மறுத்தபோது கைகலப்பு ஏற்பட்டதாகவும் சுபிர் காவல்துறையிடம் பொய்ப் புகார் அளித்தார்.

காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவான சண்டைக் காட்சிகளைக் காட்டியதுடன் சுபிர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கேலாங் சாலையில் உள்ள சிகை அலங்கார கடைக்கு வெளியிலிருந்த மின்சைக்கிளைத் திருடியது, பிடோக் நார்த்தில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் இருந்த காரிலிருந்து ரொக்க அட்டைகள், பணப்பை, ரொக்கம் ஆகியவற்றைத் திருடியது, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் தாதிக்கான பயிற்சி மாணவரைத் தாக்கியது போன்ற குற்றங்களையும் நீதிபதி கருத்தில்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்