பாண்டான் கிரசென்ட் வட்டாரத்தில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் அமைந்துள்ள 4 மீட்டர் உயரமுள்ள நீர்த்தெளிப்பான் அறைக்குள் விழுந்த ஆடவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டது.
தீயணைப்பு வீரர்கள், அவசர உதவிக் குழுவினர், பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய அவசரகாலக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.50 மணியளவில் பாண்டான் கிரசென்டில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்த ஆடவர் நீர்த்தெளிப்பான் அறையின் அடிப்பகுதியில் அமர்ந்திருந்ததைக் கண்டதாக அது மேலும் குறிப்பிட்டது.
அந்த அறையைப் பராமரிப்புப் பணிக்காகத் திறந்தபோது எதிர்பாராத விதமாக அவர் அதற்குள் தவறி விழுந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை புதன்கிழமை கூறியது.
அவரை மீட்க மருத்துவ உதவியாளர் உட்பட ஐந்து பேர் ஏணி மூலம் அந்த அறைக்குள் இறங்கினர்.
அந்த ஆடவர் தனது முதுகு, இடது காலில் வலி இருப்பதாக தெரிவித்ததால் மேலும் காயம் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ உதவியாளர் அவரை அசையாமல் இருக்கும்படி கூறினார்.
மீட்கப்பட்ட ஆடவர்ர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

