தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டியின் மொத்த சேமிப்பையும் துடைத்தெடுத்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை

2 mins read
d588536d-5a2d-45e7-b3e3-7a808f7086ac
அடாம் இல்ஹான் முகமது இடாம்சபானி, 22, சொந்த பாட்டியிடம் $280,000 ரொக்கத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொந்த பாட்டியின் ஒட்டுமொத்த சேமிப்பைக் களவாடிய ஆடவருக்கு 21 மாத சிறைத் தண்டனை (ஏப்ரல் 9) விதிக்கப்பட்டுள்ளது.

அடாம் இல்ஹான் முகமது இடாம்சபானி, 22, சொந்த பாட்டியிடம் $280,000 ரொக்கத்தைத் திருடியதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அடாமின் 77 வயது பாட்டி தமது வங்கிக் கணக்குச் சேவைகளைப் பயன்படுத்த அடாமை நம்பியிருந்தார்.

பொருள்கள் வாங்கவும் கட்டணங்களையும் நன்கொடைகளையும் செலுத்தவும் ஐந்து வங்கிக் கணக்குகளின் விவரங்களை அவர் அடாமிடம் கொடுத்துவைத்திருந்தார்.

தமக்கு ஆங்கிலம் ஓரளவுதான் தெரியும் என்பதாலும் வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்பதாலும் அடாம் தமது பாட்டியின் கணக்குகளைக் கவனித்துவந்தார்.

2023ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை அடாம் தமது பாட்டியின் கணக்கிலுள்ள மொத்த பணத்தையும் சிறிது சிறிதாக எடுத்து தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

மடிக்கணினி, இணைய விளையாட்டுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை அடாம் வாங்கினார்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமற்போனதை அடாமின் பாட்டி முதன்முறையாகக் கண்டறிந்தார். அதே ஆண்டு டிசம்பருக்குள் மொத்த பணமும் காலியானது.

அந்தப் பணம் அனைத்தும் இணைய மோசடியில் திருட்டுப்போனதாக அடாம் தமது பாட்டியிடம் கூறினார். அவரது பாட்டி காவல்துறையிடம் புகாரளித்தபோதும் அடாம் செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

பாட்டியின் பணம் காணாமற்போனது பற்றி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கிகளிடம் விசாரித்ததாக சென்ற ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அங் மோ கியோ காவல் நிலையத்தில் அடாம் கூறினார்.

அதோடு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மோசடி ஒழிப்புப் பிரிவிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் தம்மைத் தொடர்புகொண்டு பணம் அனைத்தும் மோசடிகளில் தொலைந்துவிட்டதாகக் கூறியதாக அடாம் விசாரணை அதிகாரியிடம் சொன்னார்.

மோசடி ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியை நேரடியாகப் பார்த்ததோடு இரண்டு அதிகாரிகளிடமிருந்து மோசடி தொடர்பில் இரண்டு கடிதங்களைப் பெற்றதையும் அடாம் குறிப்பிட்டார்.

ஒரு நாள் கழித்து காவல்துறை மீண்டும் அடாமிடம் விசாரணை நடத்தியபோது தாம் சொன்னது எல்லாம் பொய் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக் கணக்குகளில் உள்ள பெரிய தொகையைப் பார்த்தவுடன் அதை எடுத்து பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அடாம் தெரிவித்தார்.

விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அடாம் இதுவரை $100,000 தொகையைப் பாட்டியிடம் திரும்ப கொடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்