இரண்டு தரைவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கைவரிசையைக் காட்ட முயன்ற 69 வயது ஆடவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அதேபோன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்ட காரிஸ் பின் கஸ்மண்ட், இரண்டு ஜோடி செருப்புகளைத் திருடினார். அவர் நீதிபதியிடம் தமக்குக் கடுமையான தண்டனை விதிக்கும்படி கேட்டார்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, திருட்டு உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட காரிஸுக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஜாலான் பாத்து பேட்டையிலிருந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துக்கு காரிஸ் பேருந்தில் சென்றார்.
அங்கிருந்து ஆயர் ராஜா பெருவிரைவுச்சாலையை நோக்கி நடந்த காரிஸ் அங்குள்ள சில கால்வாய்களில் இறங்கி அதன் வழியாக சேண்ட்விச் சாலையில் உள்ள தரைவீடுகள் உள்ள பகுதிக்குள் நுழைந்தார்.
அதையடுத்து பின்னிரவு 1 மணியிலிருந்து 3.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் காரிஸ் மெயிட்ஸ்டோன் சாலையில் உள்ள தரைவீடு ஒன்றுக்குள் நுழைந்தார்.
அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வீட்டிற்குப் பின்புறம் சென்று சிறிய கதவு மூலம் மற்றொரு வீட்டுக்குள் நுழைய காரிஸ் முயன்றார்.
அந்த வீட்டின் எச்சரிக்கை மணி ஒலித்ததோடு விளக்குகளும் எரிந்ததால் அங்கிருந்து காரிஸ் தப்பினார். காரிஸ் அந்த வீடுகளிலிருந்து செருப்புகளைத் திருடினார்.
தொடர்புடைய செய்திகள்
வந்த வழியாகவே காரிஸ் பேருந்து நிலையத்திற்குச் சென்றார்.
காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில் காரிஸ் ரொக்கமும் நகையும் திருடுவதற்காகத் தரைவீட்டுக்குள் புகுந்தது அம்பலமானது.
இதேபோல 2010ஆம் ஆண்டு செய்த குற்றத்திற்காக காரிஸ் 14 ஆண்டுகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

