லேக்சைட் எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவர் எஸ்எம்ஆர்டி ஊழியரைத் தள்ளிவிடுவது கேமராவில் பதிவாகியுள்ளது.
மதர்ஷிப் வாசகர் ஒருவர் இந்தச் சம்பவத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அந்த நபர் குறைந்தது இரண்டு ஊழியர்களுடன் வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு நடந்தது என்று அந்த வாசகர் கூறினார்.
தடுத்து நிறுத்தப்பட்ட நபர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டிருந்ததாகவும், ஊழியர்கள் அவர் நிலையத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முயன்றதாகவும் வாசகர் மேலும் கூறினார்.
அதே வாசகர் வெளியிட்ட இரண்டாவது காணொளியில், எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அந்த நபரிடம் பேசுவதைக் காணலாம். அவர் அவர்களின் பேச்சைக் கேட்பதுபோல் தோன்றியது.
மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, எஸ்எம்ஆர்டி ரயில் பிரிவின் தலைவர் லாம் ஷியோ காய், ஓர் ஆண் ரயிலில் மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதாய் நிலைய ஊழியர்களிடம் ஒரு பயணி தெரிவித்ததாகக் கூறினார்.
பின்னர் எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அந்த நபரைக் கண்டுபிடித்து, அவரை ரயிலில் இருந்து இறக்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சம்பவத்தின் போது, அந்த நபர் எஸ்எம்ஆர்டி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களைத் தள்ளிவிட்டு, தனது மின்சிகரெட்டைத் திரும்பப் பெற முயன்றார் என்று திரு லாம் மேலும் கூறினார்.
“எங்கள் ஊழியர்கள் தற்காப்புக்காகச் சரியான முறையில் செயல்பட்டனர். அதே நேரத்தில் பொது ஒழுங்கைக் கட்டிக்காத்து மற்ற பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர்,” என்று திரு லாம் கூறினார்.
அந்த நபரின் நடத்தை மற்றும் எஸ்எம்ஆர்டி ரயில் கட்டமைப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு குற்றச்செயல் கடிதம் வழங்கப்பட்டது.
குற்றச்செயல் கடிதம் வழங்கப்பட்டவர்கள் அறிவுறுத்தல்களுக்கு இணங்கி தேவையான அபராதத்தை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இதுபோன்ற சட்டவிரோத நடத்தைகளை எஸ்எம்ஆர்டி தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
“மேலும், இம்மாதிரியான சம்பவங்களைக் காணும் பயணிகள் உடனடியாக எங்கள் ஊழியர்களிடம் புகாரளிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்றும் திரு லாம் கூறினார்.