பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதிக்கு வெளியே சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) சாலையில் ஒரு குழந்தை தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் சென்ற ஓர் ஆடவர் அக்குழந்தையைப் பத்திரமாக மீட்டார்.
காரின் கேமராவில் பதிவான காணொளி ஒன்று டிக்டாக்கில் வெளியிட்டப்பட்டது. அதில், அக்குழந்தை தனியாகச் சாலையைக் கடந்து முன்னால் உள்ள சாலையை நோக்கிச் செல்வதும், பின்னர் அந்த ஆடவர் அதைத் தடுத்து நிறுத்துவதும் தெரிகிறது.
அதன் பிறகு, அவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்வதும் பதிவாகியுள்ளது.
அந்த ஆடவர் குழந்தையை அணுகுவதற்குமுன் வேறு வாகனங்கள் எதுவும் குழந்தையின் அருகில் இல்லை. இருப்பினும், அவர் குழந்தையைத் தூக்கிய பிறகு ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வேன், ஒரு கார் ஆகியன குழந்தை செல்ல முயன்ற வழியில் வருவதைக் காண முடிகிறது.
காணொளியின் தலைப்பில், அக்குழந்தையைத் தடுத்து நிறுத்தியது ஒரு பெற்றோரின் இயல்பு உணர்வு என்று அந்த ஆடவர் குறிப்பிட்டார்.
“என்னால் சரியான நேரத்தில் அச்சிறுவனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. உங்கள் குழந்தைகள் எவ்வளவு தூரம் சென்றுவிடுகிறார்கள் என்பதைப் பார்க்க இந்தக் காணொளியைப் பாருங்கள். நினைவிருக்கட்டும், ஒவ்வொரு பெற்றோரின் கவலையும் அன்பிலும் அக்கறையிலுமிருந்தே வருகிறது,” என்று அவர் அதில் தெரிவித்தார்.


