சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ளச் செலுத்தப்பட்ட கட்டணத் தொகையிலிருந்து ஏறக்குறைய 470,000 வெள்ளியை மோசடி செய்த ஆடவருக்கு அக்டோபர் 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.
சிங்கப்பூரரான 58 வயது சுவாண்டி மர்ச்சுகே, நொடித்துப் போனதாக அறிவிக்கப்பட்டவர்.
முன்னதாக, புதன்கிழமை (செப்டம்பர் 3) அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
200க்கு மேற்பட்டோர் செலுத்திய கட்டணத்திலிருந்து அந்தத் தொகையைத் தவறாகப் பயன்படுத்தினார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த விசாரணையின் முடிவில், சுவாண்டி மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு, நொடித்துப்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் ‘பில் ஹிக்மா கன்சல்டன்ட்ஸ்’ எனும் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தது தொடர்பான குற்றச்சாட்டு ஆகியவை தொடர்பில் அவர் குற்றவாளி என்று மாவட்ட நீதிபதி அறிவித்தார்.
உரிமமின்றி அந்த நிறுவனம் பயண முகவைச் சேவைகளை வழங்குவதற்குத் தெரிந்தே நிதி வழங்கியது தொடர்பான மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளிலும் சுவாண்டி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.
அவர், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நொடித்துப்போனதாக அறிவிக்கப்பட்டதும் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ‘பில் ஹிக்மா’ நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டதும் முந்தைய விசாரணைகளில் தெரியவந்தது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் 22ஆம் தேதி வரையான காலகட்டத்துக்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்த உம்ரா புனிதப் பயணத்திற்கு ஒருவருக்கு $1,998 வசூலிக்கப்பட்டது. பதிவுக் கட்டணம் $150 மற்றும் சில கூடுதல் கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமாக அப்பயணத்திற்கு $3,000 முதல் $3,500 வசூலிக்கப்படும். அதைவிடக் குறைவான தொகையைக் கிட்டத்தட்ட 200 பேரிடம் வசூலித்தபோதும் நிறுவனம் பயண ஏற்பாடுகளைச் செய்யவில்லை.
2015 நவம்பரில் சுவாண்டி கைது செய்யப்பட்டார்.