தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலாங் பாருவில் ஆடவரை மலைப்பாம்பு கொத்தியது

1 mins read
4e809452-19b1-48db-8bf5-82e377007cd1
மலைப்பாம்பைப் பிடிக்க முயலும் சிலர். (வலப்படம்) ஆடவரின் கையில் மலைப்பாம்பு கொத்தியது. - படங்கள்: ஷின் மின்
multi-img1 of 2

காலாங் பாருவில் ஆடவர் ஒருவரை மலைப்பாம்பு கொத்திய சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை நிகழ்ந்தது.

புளோக் 66 காலாங் பாரு அருகே உள்ள காப்பிக்கடை அருகே இருக்கும் வடிகாலில் அந்த 2.5 மீட்டர் நீள மலைப்பாம்பு தென்பட்டது. அது காப்பிக்கடைக்குள் புகுந்துவிடக்கூடும் என்று அஞ்சியதால், சிலர் ஒன்றுசேர்ந்து அந்த வடிகாலின் மூடியை அகற்றி, அதனைப் பிடித்தனர்.

அதன்பிறகு, 60களில் இருக்கும் முதியவர் ஒருவர் அந்த மலைப்பாம்பைத் தொட்டுப் பார்க்க எண்ணி, அதனருகே தன் கையைக் கொண்டு சென்றபோது, அது கொத்தியதாகக் கூறப்பட்டது.

அதன் தொடர்பில் இரவு 8.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் அதன்பின் அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இரவு 9.30 மணிக்குச் சம்பவ இடத்திற்கு வந்த ‘ஏக்கர்ஸ்’ விலங்குநல அமைப்பின் வனவுயிர் மீட்புக் குழு, அந்த மலைப்பாம்பைப் பிடித்துச் சென்றது.

“நுண்சில்லு பொருத்தப்பட்டபின் அந்த மலைப்பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது. பொதுவாகவே, மலைப்பாம்புகள் மனிதர்களைவிட்டுத் தள்ளியே இருக்கும். ஆனால், அவற்றைச் சீண்ட நினைத்தால் அல்லது முறையின்றிப் பிடிக்க முயன்றால் அவை தம்மைத் தற்காத்துக்கொள்ள முயலும்,” என்று ‘ஏக்கர்ஸ்’ அமைப்பின் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் கூறினார்.

பாம்பு போன்ற வனவுயிர்களை மக்கள் தாங்களாகவே பிடிக்க முயலக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

வனவுயிர்களை எதிர்கொள்வோர் ‘ஏக்கர்ஸ்’ அமைப்பின் வனவுயிர் மீட்புக் குழுவை 9783 7782 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்