செங்காங்கில் சிற்றுந்து ஒன்று கூரையுடன்கூடிய நடைபாதைமீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்தச் சிற்றுந்தின் ஒட்டுநர் காயமடைந்தார்.
இந்த விபத்து திங்கட்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு புளோக் 122எஃப் ரிவர்வேல் டிரைவை நோக்கிச் செல்லும் சாலையில் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்துக் குறித்துச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்தச் சிற்றுந்தின் 40 வயது ஓட்டுநரைச் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் சுயநினைவோடுதான் இருந்தார் எனவும் மேலும் அவர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.
புளோக் 122எஃப்-க்கு அடுத்துள்ள புல்வெளியில் ஒரு வெள்ளை நிறச் சிற்றுந்து நின்றிருப்பதையும் அங்கு இருக்கும் கூரையுடன்கூடிய நடைபாதையின் ஒரு பகுதியும் சிற்றுந்தின் மேற்பகுதியும் உடைந்திருப்பதை ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளியில் காண முடிந்தது.