சாங்கியை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே பெருவிரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நான்கு கனரக லாரிகள் ஈடுபட்ட விபத்தைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மூன்று டிப்பர் கனரக வாகனங்களும் ஒரு டேங்கர் வாகனமும் விபத்தில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
கனரக வாகனம் ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்ட ஆடவரை மீட்புக் கருவிகளைக் கொண்டு காப்பாற்றியதைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை பகிர்ந்துகொண்டது.
இரண்டு டிப்பர் கனரக வாகன ஓட்டுநர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு வயது 48. மற்றவரின் வயது 46.
லேசாகக் காயமுற்ற மற்றொருவர் மருத்துவமனைக்குத் தம்மைக் கொண்டுசெல்லவேண்டாம் என்று கூறிவிட்டார்.
ரோட்ஸ் எக்சிடன்ட்ஸ்.காம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் விபத்தில் சிக்கிய லாரிகளைக் காண முடிகிறது.
தீவு விரைவுசாலையிலிருந்து வெளியேறும் சாலையின் இடக்கோடித் தடத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆக கடைசியில் நின்றுள்ள டிப்பர் கனரக வாகனம் விபத்துக்குள்ளானதாகத் தெரியவில்லை. அந்த வாகனத்துக்கும் முன்னிருக்கும் வாகனத்துக்கும் இடையே இடைவெளி காணப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்த அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.