ராணுவச் சீருடையுடன் இருக்கும் ஆடவர் ஒருவர் பொதுப் பேருந்தில் மின்சிகரெட் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து, அந்த நபர் சிங்கப்பூர் ஆயுதப் படையால் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) கூறியது.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் பகிரப்பட்டு வரும் அந்தக் காணொளி தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய வினாக்களுக்குப் பதில் அளித்த அமைச்சு, அந்தக் காணொளியை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தது.
தேசிய சேவையில் இருப்போர், தடைசெய்யப்பட்ட மின்சிகரெட்டை வைத்திருப்பதும் அதனைப் புகைப்பதும் ராணுவ ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிரானது; தேசியச் சட்டத்தின்கீழ் அது குற்றச்செயலாகும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
அந்தக் குற்றத்திற்கு $1,000 வரை அபராதம் விதிக்க முடியும் என்றும் சேவையாளரைத் தடுத்து வைக்கவும் முடியும் என்றும் அது விளக்கியது. மின்சிரெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிங்கப்பூர் ஆயுதப் படை ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு கூறியது.
இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் $41 மில்லியனுக்கும் அதிகமான மின்சிகரெட்டுகளையும் அது தொடர்பான பொருள்களையும் சுகாதார அறிவியல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

