எம்ஆர்டி ரயிலில் மின்சிகரெட் புகைத்த ஆடவருக்கு அபராதம்

எம்ஆர்டி ரயிலில் மின்சிகரெட் புகைத்த ஆடவருக்கு அபராதம்

படம்: ஷின்மின்

24 Feb 2026 - 8:40 pm

2 mins read

எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது மின்சிகரெட் புகைத்த ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

37 வயது டே சூன் லூங் அலோய்ஷியஸ் ரயிலில் மின்சிகரெட் புகைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்ததை அடுத்து, அவரது சட்டவிரோதச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

போலி புகையிலைப் பொருள் ஒன்றை வைத்திருந்தது, வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ரயிலில் டே மின்சிகரெட் புகைப்பதைக் காட்டும் டிக்டாக் காணொளி குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றபோதிலும் காணொளியில் இருப்பது தான்தான் என்று ஒப்புக்கொண்ட டே, அதைப் பயன்படுத்திய பிறகு வீசிவிட்டதாகக் கூறினார்.

வேலைக்குச் செல்லும் வழியில் தூக்கம் வராமல் இருப்பதற்காக ரயிலில் மின்சிகரெட் பயன்படுத்தியதாக அவர் விசாரணையின்போது தெரிவித்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட பிறகு, அதற்கு மாற்றாக மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

கேலாங் வட்டாரத்தில் உள்ள ஒரு காப்பிக்கடைக்குப் பின்புறத்தில் உள்ள சந்தில் $22 கொடுத்து அந்த மின்சிகரெட்டை வாங்கியதாக டே கூறினார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், அதே இடத்தில் பங்ளாதேஷியர் ஒருவரிடமிருந்து வெவ்வேறு வேளைகளில் மூன்று மின்சிகரெட்டுகளை அவர் வாங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளை வைத்திருப்பது அல்லது வாங்குவது நிரூபிக்கப்பட்டால் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்எம்ஆர்டிஅபராதம்