ஆடம்பரமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்காக, செப்டம்பர் 2019 முதல் ஜனவரி 2024 வரை சாலை விபத்துகளைத் திட்டமிட்டுச் ஏற்படுத்தி, வாகன ஓட்டுநர்களிடம் இருந்து தனிப்பட்ட முறையில் ரொக்கப் பணத்தை ஆடவர் ஒருவர் ஏமாற்றிப் பெற்றார்.
28 வயதான டேனியல் அலி லியாகத் அலி, கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது 73 சாலை விபத்துகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை டேனியல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை.
ஜூன் 5, டேனியலுக்கு 32 வாரச் சிறைத்தண்டனையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, 48 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ புதிய உரிமம் பெறவோ அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றுவது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது, மற்றவர்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகளை டேனியல் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்டபோது, மேலும் 25 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
வாகனம் ஓட்டும்போது மற்ற வாகனங்களுடன் மோதலுக்கு நெருக்கமான சூழலை அல்லது மோதலை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை டேனியல் தேடுவார்.
ஆபத்தான முறையில் அந்த வாகனங்களுக்கு மிக அருகில் செல்வது, வேண்டுமென்றே ‘பிரேக்’ பிடிக்காமல் இருப்பது அல்லது வேகமாகச் சென்று பக்கவாட்டில் மோதுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு சம்பவத்திற்குப் பிறகும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களை டேனியல் அணுகி, தனிப்பட்ட முறையில் $180 முதல் $1,500 வரை இழப்பீடு கோருவார்.
இவ்வாறு அவர் மொத்தமாக எவ்வளவு தொகையைப் பெற்றார் என்பது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
இந்தக் குற்றங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
தண்டனையைக் குறைப்பதற்கான வேண்டுகோளின்போது, தமது செயல்களுக்காக வருந்துவதாக டேனியல் கூறினார்.
தாம் ஏமாற்றிய ஓட்டுநர்களுக்கு அவர் இழப்பீடு வழங்கினாரா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

