சிராங்கூன் சென்ட்ரல் வட்டாரத்தில் கார்களை மறைத்ததாக நம்பப்படும் 56 வயது ஆடவர் ஒருவர் புதன்கிழமை (ஜூலை 1) கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை காலை 9.40 மணியளவில் சிராங்கூன் சென்ட்ரல் டிரைவ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 261 இருக்கும் பகுதியில் உதவி தேவைப்படுவதாகத் தங்களுக்கு அழைப்பு வந்ததெனக் காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 2) தெரிவித்தது.
அந்த ஆடவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் சுயநினைவு இருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது. ஒருவரைத் தாங்கள் செங்காங் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
சம்பவம் பதிவான காணொளி, ‘சிங்கப்பூர் இன்சிடெண்ட்ஸ்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியில் ஆடவர் ஒருவர் கார்களை மறைப்பது அந்தக் காணொளியில் தெரிந்தது.
அந்த ஆடவர் தனது கைகளை நீட்டியபடி இருந்தது காணொளியில் தெரிந்தது. பிறகு வாகனங்களுக்கான போக்குவரத்து சமிக்ஞை பச்சையாக இருந்தபோது அவர் ஒரு காருக்கு முன்னால் குதித்து அதை முன்னுக்குப் போகவிடாமல் தடுத்ததும் தெரிந்தது.
பிறகு அந்த கார் புறப்பட்ட பிறகு ஆடவர் மற்ற கார்களையும் மறைத்தது தெரிந்தது. பேருந்தை மறைத்தபோது அதன் ஓட்டுநரைப் பார்த்து அவர் கத்தியதாகவும் நம்பப்படுகிறது. பின்னர் அந்த அடவர் முன்னால் குதித்து சாலையோர மேடைமீது தலையை மோதிக்கொண்டதும் காணொளியில் தெரிந்தது.
பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

