இணையத்தில் போலி அடையாளத்துடன் ஆடவர் ஒருவர் மாதை $97,000க்குமேல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
முகம்மது ஷாருல் அனூர் என்ற அந்த 30 வயது ஆடவர் மீது வெள்ளிக்கிழமை 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நிதி தேவைப்படும் எண்ணெய் வர்த்தகர் ‘மெல்கம் டான்’ என்பவரிடம் பேசிக்கொண்டிருந்ததாக அந்த மாதை அவர் நம்பவைத்தார் எனச் சந்தேகிக்கப்படுவதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த 34 வயது மாது வங்கிப் பணமாற்றம் மூலம் அந்த ஆடவருக்கு மொத்தம் $97,510 கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஷாருல், தமக்கு வாதாட தற்காப்பு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் நீதிமன்ற விசாரணை கோர திட்டமிடுவதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.
இதுவரை எடுத்ததாகக் கூறப்படும் பணம் எதனையும் அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்றாடச் செலவுகளுக்கும் கடன் அடைப்பதற்கும் அந்தப் பணத்தை ஷாருல் பயன்படுத்தினார் என நம்பப்படுவதாகக் காவல்துறையினர் கூறினர்.
ஷாருலின் அடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.