கார் நிறுத்துமிட நுழைவுத்தடுப்புகளை அகற்றுவதைக் காட்டும் இரண்டு காணொளிகளில் காணப்படுவதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர்மீது திருட்டு, குறும்புச்செயலில் ஈடுபடுவது என இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மலேசியரான கியூ ஆ ஹிங், 46, மே 24ஆம் தேதி பயனியரில் உள்ள புரோ ஸ்திரிட்டில் அமைந்துள்ள ‘வெஸ்ட் கனக்ட்’ கட்டடத்தில் பேனாகத்தியைப் பயன்படுத்தி அத்தகைய நான்கு நுழைவுத்தடுப்புகளை அகற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அதன் பிறகு சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர் அவற்றைக் கட்டடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ‘கியென் ஹெங் டிரக் பாடி பில்டர்’ வளாகத்தில் வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கியூ, ‘டுரியான் ஹெங் யூனியன்’, ‘கியென் ஹெங் டிரக் பாடி பில்டர்’ உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக இருக்கிறார்.
அதே நாள் கட்டடத்தில் இருந்த இரண்டு சக்கரப் பிடிகருவிகளைச் சேதப்படுத்தியதாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு $500.
தனது செயல்களைக் காட்டும் காணொளிகளை அவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
கியூ, ஜூன் 12ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
அவரின் வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.