வீட்டு வாடகை வருமானத்தைத் தன்னுடன் பகிர்ந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர், தனது 72 வயதுத் தந்தையைத் தொலை இயக்கியால் (remote control) பலமுறை அடித்ததுடன் அவரது நெஞ்சிலும் மிதித்தார்.
அந்தத் தாக்குதலால், தற்போது 75 வயதாகும் அந்த முதியவருக்கு விலா எலும்புகளில் முறிவும் தலைப்பகுதியில் காயமும் ஏற்பட்டன.
டியோ யாவ் ஸோங், 35, என்ற அந்த ஆடவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) கடும் காயத்தை ஏற்படுத்தியதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 21 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணையின் தொடக்கத்தில், தனது அறையைச் சுத்தம் செய்ய நேரம் தேவைப்படுவதால், தனது வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்குமாறு தியோ கோரினார்.
அறையை முன்பே ஏன் சுத்தம் செய்யவில்லை என்று துணைத் தலைமை மாவட்ட நீதிபதி ஓங் சின் ரூ கேட்டபோது, தான் சுத்தம் செய்யத் தொடங்கியதாகவும் அறை மிகவும் கலைந்து காணப்பட்டதால் அதை முடிக்க முடியவில்லை என்றும் தியோ பதிலளித்தார்.
வழக்கை ஒத்திவைக்க அவர் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஓங் நிராகரித்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
வருமானத்தைப் பெருக்குவதற்காகத் தந்தை தமது வீட்டில் உள்ள ஓர் அறையை வாடகைக்கு விட்டிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கெல்லி இங் கூறினார்.
வாடகைப் பணத்தைத் தன்னிடம் பகிர்ந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்த டியோ, 2023ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்னர், வீட்டில் இருந்த சில பொருள்களை எடுத்து எறிந்தார். அவரது தந்தை அவரைத் தடுக்க முயன்றபோது, டியோ தொலை இயக்கியால் அவரது தலையில் பலமுறை அடித்தார்.
கீழே விழுந்த தந்தையை அவர் நெஞ்சில் மிதித்தார். வீட்டிலிருந்து தப்பித்த தந்தை, காவல்துறையைத் தொடர்புகொண்டார்.
டியோ, 2023ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


