சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ‘பிஸ்னஸ்’ வகுப்பில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானச் சிப்பந்தியிடம் தன்னுடைய பாலின உறுப்பைக் காட்டியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தோனீசியரான பிரில்லியண்ட் அங்ஜயா, 23, தன்னுடைய தகாத செயலால் சிப்பந்திக்கு ஏற்படும் அதிர்ச்சியைப் படம்பிடிக்க தனது கைப்பேசியையும் பயன்படுத்தியிருந்தார்.
பாலின உறுப்பைக் காட்டிய குற்றச்சாட்டைத் திங்கட்கிழமை (மார்ச் 24) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி, அவரது செயல் மன்னிக்க முடியாதது என்று குறிப்பிட்டார்.
ஜனவரி 23ஆம் தேதி சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட விமானச் சிப்பந்தியின் பெயர், அடையாளங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அங்ஜயா உறங்குவதற்கு முன்பு இரண்டு குவளை ஷாம்பெய்ன் வாங்கிக் குடித்தார் என்று நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
தூக்கத்திலிருந்து எழுந்ததும் அவர் கழிவறைக்குச் சென்று திரும்பினார். பின்னர் தன்னுடைய பாலின உறுப்பைக் காட்டி படம்பிடிக்க முடிவுசெய்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாலை 4.45 மணியளவில் தனது இருக்கைக்குத் திரும்பிய அவர், கைப்பேசியை காணொளிப் பதிவுசெய்யும் நிலையில் வைத்து தனது காற்சட்டையைக் கழற்றி பாலின உறுப்பைக் காட்டினார்.
அப்போது அங்கு உணவு கொடுக்க வந்த விமானச் சிப்பந்தி, அங்ஜயாவின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து விலகி ஓடிய விமானச் சிப்பந்தி, அதுபற்றித் தம் மேலாளரிடம் புகார் செய்தார்.
அதையடுத்து, காலை 6.45 மணியளவில் விமானம் தரையிறங்கியதும் அங்ஜயா கைதுசெய்யப்பட்டார்.

