காவல்துறை அதிகாரியைக் கடித்த 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.
காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் அதிகாலை 1.25 மணியளவில் காரை படுவேகத்தில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்றதை காவல்துறை அதிகாரிகள் கண்டனர்.
காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டியும் நிற்காமல் வேகமாகச் சென்ற கார் சிவப்பு நிற போக்குவரத்து விளக்கையும் மீறிச் சென்று, பொங்கோல் சென்ட்ரல் அருகே உலோகத் தூணில் மோதியது.
காரில் இருந்து இறங்கி ஓடிய ஆடவரை காவல்துறை அதிகாரிகள் துரத்திப் பிடித்தனர்.
அவரைத் தடுத்து வைக்க முயன்றபோது ஓர் அதிகாரியின் இடது கையில் அந்த ஆடவர் கடித்ததாக காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.
அந்தச் சம்பவம் நடைபெற்றபோது மேலும் சில அதிகாரிகள் அங்கு வந்துவிட்டனர். ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போதைப்பொருள் இருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம், அடையாளம் தெரியாதோரிடம் சிங்பாஸ் விவரங்களைத் தெரிவித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த ஆடவர் அவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் கடித்ததால் காயமடைந்த 26 வயது அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவித்த காவல்துறை, போதைப்பொருள் தொடர்பான குற்றம் குறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்து வருவதாகக் கூறியது.

