கட்டுமான நிறுவன இயக்குநர் ஒருவர், சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் கட்டட, வளாக செயல்பாட்டு (facilities management) இயக்குநருக்குக் குறைந்தது 192,000 வெள்ளியை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்.
இந்தக் குற்றம் நிகழ்ந்தபோது விலங்குத் தோட்டம், சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின்கீழ் (WRS) செயல்பட்டு வந்தது. வனவிலங்குக் காப்பகம், அல்ட்ரோன் கன்ஸ்டிரக்ஷன் (Ultron Construction) எனும் நிறுவனத்திடம் 3.7 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான பணிகளை ஒப்படைத்திருந்தது.
அத்தொகையில் 2.7 மில்லியன் வெள்ளியை வனவிலங்குக் காப்பகம், அல்ட்ரோனிடம் கொடுத்திருந்தது.
இப்போது மண்டாய் வனவிலங்குக் குழுமம் என்றழைக்கப்படும் அது, இந்த விவகாரத்தில் 192,000 வெள்ளி இழப்பைச் சந்தித்தது. அல்ட்ரோன் ஊழலில் ஈடுபட்டது அதற்குக் காரணம்.
குற்றவாளியான 46 வயது வோங் எங் குவெனுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தது 140,000 வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். அவர் இக்குற்றங்களை 2016ஆம் ஆண்டு புரிந்தார்.
எஞ்சிய தொகை சம்பந்தப்பட்ட மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

