கட்டுக்கதைகளை சொல்லி $25,000 மோசடி செய்த ஆடவர்

கட்டுக்கதைகளை சொல்லி $25,000 மோசடி செய்த ஆடவர்

2 mins read
6b7c0837-e6fa-4aed-9195-0c054912db32
டான் யூ ‌ஷூ 2023ஆம் ஆண்டு முதல் மோசடி வேலைகளில் ஈடுபட்டார். - படம்: சமூக ஊடகம்

விதவிதமான கட்டுக்கதைகளைச் சொல்லி 27 வயது ஆடவர் ஒருவர் 25,700 வெள்ளி பணத்தை ஏமாற்றிப்பெற்றுள்ளார்.

டான் யூ ‌ஷூ என்னும் அந்த ஆடவர் 6 பேரை ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி செய்த சந்தேகத்தில் டான்மீது 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை (நவம்பர் 13) நடந்த வழக்கு விசாரணையை காணொளி வழியாக டான் எதிர்நோக்கினார்.டான் மோசடி செய்த தொகையில் 7,000 வெள்ளி மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார்.

டான் 2023ஆம் ஆண்டு முதல் மோசடி வேலைகளில் ஈடுபட்டார்.

அவ்வாண்டு அக்டோபர் மாதம் டான் தமக்கு வர்த்தகத்தில் ந‌ஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதை சமாளிக்க நிதி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ஆடவர் ஒருவர் டானுக்கு 3,500 வெள்ளி கொடுத்தார்.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் அதே ஆடவரிடம் டான் தமது கடன்பற்று அட்டைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி 3,500 வெள்ளி பெற்றார்.

இந்நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதம் டான் மற்றொரு ஆடவரிடம் 4,000 வெள்ளி வாங்கினார். தாம் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அதனால் பாதிப்படைந்தவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ஆடவரை ஏமாற்றினார்.

பின்னர் அதே ஆடவரை ஜூலை மாதம் தொடர்புகொண்டு 1,500 வெள்ளி வாங்கினார் டான். இம்முறை கைப்பேசி, வீட்டுவாடகை எனக்கூறி பணத்தை பெற்றார்.

ஏப்ரல் மாதமும் டான் ஒரு நபரிடம் 1,000 வெள்ளி வாங்கினார். மேலும் டான் அடையாளம் தெரியாத நபருக்கு தமது வங்கி கணக்கு தகவல்களை கொடுத்து பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார்.

டான் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 11ஆம் தேதி நடக்கிறது.

மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மோசடிநிதி மோசடிகுற்றம்