யூஹுவா பிளேஸ் உணவு மையத்தில் ஆடவர் ஒருவர் சீன உணவுக் கடைக்கு வெளியே உள்ள மேசையையும் அதைச்சுற்றியுள்ள இருக்கைகளையும் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்யும் காணொளி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.
அவரின் செயலை அசுத்தமானது என்று கண்டித்தும், மேசைகளைச் சுத்தம் செய்வதற்கென்றே பயன்படும் துடைப்பமாகக் கூட இருக்கலாம் என்று ஆதரவளித்தும் பலர் குரல் எழுப்பியுள்ளனர்.
நீண்ட கைப்பிடியைக் கொண்ட அந்தத் துடைப்பத்தை ஆடவர் புதிதாக வாங்கியதாகவும் வழக்கமாக அதைக்கொண்டு மேசை, இருக்கைகளை அவர் சுத்தம் செய்வதாகவும் யூஹுவா தொகுதியின் வர்த்தக உரிமையாளர்கள், உணவுக்கடைக்காரர்கள் சங்கத் தலைவர் கார்னி ங்காய் சிங் குவான் விளக்கம் அளித்தார்.
அந்த ஆடவர் துப்புரவுப் பணியாளர் அல்ல, அந்த உணவுக் கடையின் உரிமையாளர் என்றும் திரு கார்னி கூறினார். சகோதரியுடனும் மைத்துனருடனும் இணைந்து ஆடவர் ‘சை ஃபான்’ என்ற சீன உணவை விற்பனை செய்யும் ‘வெல்கம் ஃபூட்’ என்ற பெயரில் உணவுக் கடையை நடத்தி வருவதாகத் திரு கார்னி தெரிவித்தார்.
சமூக ஊடகமான எயிட்வொர்ல்டு நியூஸ் வெளியிட்ட செய்தியில், ஆடவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மீண்டும் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று கூறியிருப்பதாகவும் அறியப்படுகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் இதுபோன்று செய்யவேண்டாம் என்று ஆடவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

