மகன்களை வாகனத்தின் பின்புறம் அமரவைத்து காரோட்டிய ஆடவருக்கு $5,000 அபராதம்

மகன்களை வாகனத்தின் பின்புறம் அமரவைத்து காரோட்டிய ஆடவருக்கு $5,000 அபராதம்

2 mins read
1eddb8b2-b41d-4a17-99cf-b33f92dcd600
பிரேம் ஆனந்த் சுகுணகுமாரின் (இடது) செயலைக் கண்ட மற்றொரு வாகன ஓட்டுநர் காவல்துறையிடம் புகாரளித்தார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ரெட்டிட் காணொளி

சொகுசு வாகனத்தின் பின்புறப் பகுதியில் சிறுவயது மகன்கள் இருவரை அமரவைத்து ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய ஆடவருக்குப் புதன்கிழமை (ஜூலை 29) $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரரான 40 வயது பிரேம் ஆனந்த் சுகுணகுமாருக்கு ஆறு மாத காலத்திற்கு வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

2025ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, முறையே 7, 8 வயதுடைய மகன்களுடன் இருக்க விரும்பிய பிரேம், அவர்களுக்குமகிழ்ச்சியான அனுபவத்தைத் தர நினைத்தார்.

எனவே, தனது போர்‌ஷே (Porsche) காரின் பின்புறப் பகுதியில் அவர்களைப் பின்னோக்கிப் பார்த்தவாறு அமரவைத்து, டெய்ரி ஃபார்ம் லேன் வழியே வாகனத்தை ஓட்டிச் சென்றார். அச்சம்பவத்தை அவரது மனைவி காணொளியாகப் பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றினார்.

ஆனால், பிரேம் வாகனத்தை ஓட்டியபோது அவ்வழியே சென்ற மற்றொரு வாகன ஓட்டுநர் அச்சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி பிரேம் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது அரசாங்கத் துணை வழக்கறிஞர் செரில் டான், பிரேமுக்கு $5,000 அபராதமும் ஆறு மாதகாலம் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கும்படி கோரினார். பிள்ளைகளின் தந்தையாக அவர்களது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டியவர், அவர்களைத் தெரிந்தே ஆபத்தில் தள்ளியிருப்பதாக அவர் சாடினார்.

மேலும், 2004ஆம் ஆண்டிலிருந்து பிரேம் பல்வேறு சாலைப் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதையும் குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகப் பலமுறை அபராதம் செலுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கை விசாரித்த துணை முதன்மை மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ, “பிரேமின் முந்தைய போக்குவரத்து விதிமீறல் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் சாலைப் போக்குவரத்துச் சட்டங்களை மதிப்பதாகத் தெரியவில்லை,” என்று கவலை தெரிவித்தார். எதிர்காலத்திலாவது சட்டங்களை மனத்தில் கொண்டு வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்திய அவர், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறினார்.

14 வயதிற்கு உட்பட்ட சிறாரின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட குற்றத்திற்கு $5,000 வரையிலான அபராதம், ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்