ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளை நச்சுநிரல்களைக் கொண்டு எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்த காணொளியைப் படமெடுத்து மோசடிக் கும்பலுக்கு உதவிய மலேசிய ஆடவருக்கு ஐந்து ஆண்டுகள், ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 3,608 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சியோ ஹை பெங் என்னும் அந்த 49 வயது மலேசியரின் நடவடிக்கையால் சிங்கப்பூரில் உள்ள 129 பேர் மோசடிக்கு ஆளாகினர். அதன்மூலம் மொத்தம் 3.2 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.
சியோ, 2008ஆம் ஆண்டு தென்கொரியச் சிறைச்சாலையில் இருந்தபோது தைவானைச் சேர்ந்த லீ ரோங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது.
2022ஆம் ஆண்டு இருவரும் டாம்னிக்கன் குடியரசு நாட்டில் சந்தித்தனர். அதன்பின்னர் இருவரும் இணைந்து மோசடி வேலைகளில் ஈடுபட்டனர்.
நச்சுநிரல்களை எப்படிக் கையாள்வது என்பதை மற்ற மோசடியாளர்களுக்குக் கற்றுக்கொடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நச்சுநிரலைப் பயன்படுத்தும் காணொளிகளை அவர்கள் எடுத்துள்ளனர். 2023 ஏப்ரல் மாதம் சியோ மலேசியாவுக்குத் திரும்பினார். மொத்தம் 20 காணொளிகளை எடுக்க அவர் உதவினார். அதற்காக அவர் US$1,700 பெற்றார்.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் பினாங்கில் அவர் கைதுசெய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
லீ ரோங் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

