நாள்பட்ட நோய்கள் உள்ள தம்பியைக் கொன்ற ஆடவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை

நாள்பட்ட நோய்கள் உள்ள தம்பியைக் கொன்ற ஆடவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை

2 mins read
050e5267-5819-4262-8288-51d40091473f
கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பூன் லேயில் உள்ள வீட்டில் 56 வயது ஆடவர் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பல்வேறு நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த தம்பியைக் கொலை செய்த ஆடவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பூன் லேயில் வசித்த 58 வயது அப்துல் ரானி முகம்மது அரிஃபின், தமது 56 வயது தம்பி அப்துல் ரஹ்மான் முகம்மது அரிஃபின்னைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அளவுக்கு அதிகமாகச் சுத்தம் செய்யும் பழக்கமுடைய தம்பியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ரானி தமது தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

நாள்பட்ட நோயால் அவதியுறும் தம்பியின் சிரமத்தை நிரந்தரமாக நிறுத்தவும் ரானி அந்தக் கொலையைச் செய்ததாக உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

தற்போது 59 வயதை எட்டியுள்ள அவர், பல்வேறு உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டதுடன் மன உளைச்சலுக்கும் எரிச்சலுக்கும் உள்ளானதாக மனநலப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது. ரானி, பராமரிப்பாளருக்குரிய மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இரண்டு மூத்த சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்துவந்த ரானியும் அவரது தம்பியும் வேலை செய்யவில்லை. வீட்டுக்குப் பொருள்கள் வாங்குவது, மருத்துவரைப் பார்க்க உடன்பிறப்புகளை அழைத்துசெல்வது போன்ற வேலைகளை ரானி பெரும்பாலும் செய்துவந்தார்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரானியின் தம்பி, 2008ஆம் ஆண்டிலிருந்து மன அழுத்தத்துக்கும் ஆளாகினார்.

வாழ்நாள் முழுதும் தம்பியின் உயிரைப் பறித்த நினைவுடன் வாழவேண்டியிருப்பதைக் கருத்தில்கொண்டு ரானிக்குத் தண்டனை விதிக்கும்படி தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்