தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தன் டெலிவரு கணக்கை வெளிநாட்டவர் பயன்படுத்த அனுமதித்தவருக்கு அபராதம்

1 mins read
e7fa8037-d705-4800-a094-007ee8fa34ec
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை கிம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது ‘டெலிவரு’ கணக்கை வெளிநாட்டவர் ஒருவர் பயன்படுத்தி ஓர் உணவு விநியோக ஓட்டுநராக வேலைசெய்ய அனுமதித்த 36 வயது லோ கிம் சூன் என்பவருக்கு வியாழக்கிழமையன்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த வெளிநாட்டவரிடம் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு முறையான அனுமதி அட்டை இல்லை.

இணையவழி உணவு விநியோக நிறுவனமான டெலிவருவில் உள்ள லோவின் கணக்கைத் தான் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று மலேசியாவைச் சேர்ந்த 27 வயது முகம்மது சியாஸுவான் ஷரில், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லோவிடம் கேட்டதாக அறியப்படுகிறது.

இதன் மூலம் தான் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்றும் லோவிடம் சியாஸுவான் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் மட்டுமே டெலிவருவில் சேர முடியும் என்பதால் தன் நண்பனான சியாஸுவானுக்கு உதவ, லோ தனது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் தந்ததாகக் கூறப்பட்டது.

சட்டத்திற்குப் புறம்பான செயல் இது எனத் தான் அறியவில்லை என்று லோ கூறியிருந்தார். வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சியாஸுவான் கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்கு இந்த ஏற்பாட்டின்படி வேலை செய்து $2,200 ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்