$3 பில்லியன் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்குடன் தொடர்புடையவர்களில் ஒருவரான சூ பிங்ஹாயின் கார் ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமது முதலாளியின் சொகுசு கார்கள் குறித்து அவர் காவல்துறையினரிடம் பொய்யுரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லியூ யிக் கிட், 42, என்ற இந்த ஆடவருக்கு திங்கட்கிழமை (ஜூன் 30) மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பதிவான ஆகப் பெரிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் சிங்கப்பூரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த $3 பில்லியன் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கில் வெளிநாட்டினர் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இடங்களில் அவர்கள் பிடிபட்டனர்.
அந்தப் பத்துப் பேருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை அனுபவித்த பிறகு அவர்கள் நாடுகடத்தப்பட்டனர். அத்துடன், சிங்கப்பூருக்குள் நுழையவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், மற்றவர்கள் கைது செய்யப்பட்ட அதே நாளன்று லியூவின் முதலாளி சூ பிங்ஹாய், சிங்கப்பூரிலிருந்து கிளம்பி மலேசியா சென்றார். துவாஸ் சோதனைச்சாவடி வழியாக அவரை மலேசியாவுக்கு காரில் ஓட்டிச் சென்றார் லியூ. இருவரும் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினர்.
பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று சூவை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் லியூ இறக்கிவிட்டார். அங்கிருந்து விமானம் மூலம் சூ வேறொரு நாட்டுக்குச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
புறப்படுவதற்கு முன்பு, சிங்கப்பூரில் உள்ள தமது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நான்கு சொகுசு கார்களை விற்கும்படி லியூவிடம் அவர் தெரிவித்தார்.
சூவுக்குச் சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம், ரோல்ஸ் ராய்ஸ் கலினன், ஃபெராரி எஃப்8 ஸ்பைடர், ஃபெராரி ஸ்ட்ராடெல் ஆகிய கார்களின் மொத்த மதிப்பு $8,364,297.
அந்த நான்கு கார்களையும் அவற்றின் சாவிகளையும் லியூவிடம் சூ ஒப்படைத்தார்.
விற்கப்படும் தொகையில் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு தரகுத் தொகையை லியூ எதிர்பார்த்தார். அதாவது தமக்கு ஏறத்தாழ $80,000 கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.
சிங்கப்பூர் திரும்பியதும் அந்த நான்கு கார்களையும் ஓட்டிச் சென்று, அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் அவர் நிறுத்தினார். அவற்றை விற்கவும் ஏற்பாடு செய்தார்.
‘புரோகார்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நான்கு கார்களையும் விற்க லியூ ஏற்பாடு செய்தார்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியது. தமது முதலாளி தம்மிடம் விலை உயர்வான பொருள்களை விட்டுச் செல்லவில்லை என்று லியூ பொய் கூறினார்.
காவல்துறை கண்டுபிடித்துவிடும் எனப் பயந்து அந்த நான்கு கார்களையும் அவர் மீண்டும் அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தினார்.
ஆனால் சூவின் நீல நிற ரோல்ஸ் ரோஸ் ராக்சி ஸ்குவேர் வாகன நிறுத்துமிடத்தில் இருந்ததாக 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதியன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த காரையும் விற்க லியூ ஏற்பாடு செய்திருந்தார்.
கார்களை விற்க லியூ ஏற்பாடு செய்ததாக கார் விற்பனை நிறுவனம் காவல்துறையிடம் தெரிவித்தது. இதையடுத்து, லியூ கைது செய்யப்பட்டார்.

