தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேபோட் மின்சிகரெட் தயாரித்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை

2 mins read
எட்டோமிடேட் தொடர்பான குற்றத்துக்காக சிங்கப்பூரில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு
99ed567e-0046-463a-aedb-75bfb4097fbc
2024 டிசம்பரில் ஈசூனில் உள்ள ஒரு வீட்டில் எட்டோமிடேட் கலந்த 26.4 கிராம் வெள்ளைப் பொடியுடன் இருந்த அகிலை அதிகாரிகள் பிடித்தனர். அதிகாரிகள் கண்டெடுத்த எட்டோமிடேட்டைக் கொண்டு 70க்கும் அதிகமான ‘கேபோட்’ மின்சிகரெட்டுகளைத் தயாரிக்க முடியும். - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

சிங்கப்பூரில் கேபோட் எனும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் தொடர்பான வழக்கில் முதன்முறையாக ஆடவர் ஒருவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் $400 அபராதமும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) விதிக்கப்பட்டுள்ளது.

முகமது அகில் அப்துல் ரஹிம், 41, எட்டோமிடேட் கலந்த கேபோட் மின்சிகரெட்டுகளை உருவாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈசூனில் உள்ள வீட்டில் எட்டோமிடேட் கலந்த 26.4 கிராம் வெள்ளைப் பொடியுடன் இருந்த அகிலை அதிகாரிகள் பிடித்தனர். அதிகாரிகள் கண்டெடுத்த எட்டோமிடேட்டைக் கொண்டு 70க்கும் அதிகமான ‘கேபோட்’ மின்சிகரெட்டுகளைத் தயாரிக்க முடியும்.

சிங்கப்பூரரான அகில் இம்மாதம் 13ஆம் தேதி பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவற்றுள் அதிகமானவை மின்சிகரெட் தொடர்பானவை. குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் போலியான வாக்குமூலம் கொடுத்ததையும் அகில் ஒப்புக்கொண்டார்.

எட்டோமிடேட் தொடர்பான குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது மிகவும் முக்கியம் என்று துணை முதன்மை மாவட்ட நீதிபதி ஓங் சின் ரூ குறிப்பிட்டார்.

எட்டோமிடேட் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய கடுமையான பின்விளைவுகளைக் காண முடிகிறது என்று வலியுறுத்திய அவர், இயற்கைக்கு மாறான பல மரணச் சம்பவங்கள் எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடையவையாக உள்ளதைச் சுட்டினார்.

அகிலின் வழக்கைப் பொறுத்தவரை அதில் எல்லைக் கடந்த அம்சங்கள் உள்ளது என்றும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும் நீதிபதி ஓங் குறிப்பிட்டார்.

கேபோட் தொடர்பான குற்றங்களைப் புரிவதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜோகூரில் உள்ள கடைத்தொகுதிக்குச் சென்றதை அகில் முந்திய விசாரணைகளில் குறிப்பிட்டார்.

அங்கு எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைச் சிங்கப்பூரில் உள்ள பயனீட்டாளர்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் வேலையை ‘ஜோ’ என்ற சந்தேக நபர் தமக்கு கொடுத்ததாக அகில் கூறினார்.

அத்தகைய எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்கான பொருள்கள் அஞ்சல் வழியாக அகிலின் வீட்டிற்கு அனுப்பப்பட்டன என்று சுகாதார அறிவியல் ஆணைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொன்னார்.

அகில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஒவ்வொரு கேபோட்டுக்கும் $10 தொகையைப் பெற்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி காலை 9 மணியளவில் பிடிபட்ட அகில் அதிகாரிகளிடம் கடப்பிதழை ஒப்படைத்தார்.

ஆனால் கடப்பிதழ் இல்லாமல் மலேசியாவுக்குச் செல்ல அவர் முயன்றதும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் கடப்பிதழ், அடையாள அட்டை கொண்ட பையைக் காப்பிக் கடையில் தொலைத்துவிட்டதாகப் பொய் சொல்லி அகில் புதிய கடப்பிதழைப் பெற்றார்.

குறிப்புச் சொற்கள்