கேலாங்கில் சூதாட்டக் கூடங்களை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்ற 66 வயது ஆடவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 14 அன்று வெளியான ஒரு செய்திக் குறிப்பின்படி, அந்த ஆடவர், பிப்ரவரி 28ஆம் தேதி மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிங்கப்பூருடன் தொடர்புகளைக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த குற்றச்செயல் குழுவின் தலைவராக நம்பப்படும் அந்த நபர், அக்டோபர் 2018ல், காவல்துறையின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.
கேலாங், செங்காங், பிடோக், அங் மோ கியோ உள்ளிட்ட தீவு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட 19 பேரில் இவரும் ஒருவர்.
கேலாங் லோரோங் 14 மற்றும் லோரோங் 16ல் சட்டவிரோத சூதாட்டக் கூடங்களை நடத்துவதில் இந்தக் குழு ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 19 பேரும், மார்ச் 10, 2021 அன்று நீதிமன்றத்தில், பொதுச் சூதாட்ட மனைகள் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
அந்த ஆடவர் பின்னர் சிங்கப்பூரிலிருந்து தலைமறைவானார். சட்டவிரோத சூதாட்டக் கூடங்களை நடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அந்த நபருக்கு எதிராக அரசு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது. ஆனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இவ்வாண்டு பிப்ரவரி 13 அன்று, மலேசியாவில் குடியேற்றக் குற்றங்களுக்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் அவருக்கு RM3,000 (S$901) அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மலேசிய காவல்துறை, சிங்கப்பூஈர் காவல்துறையிடம் தெரிவித்தது.
அந்த ஆடவர் மார்ச் 1ஆம் தேதி, எஞ்சியுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.
உள்ளூரில் தொடர்புடைய வெளிநாட்டு குற்றக் கும்பலில் உறுப்பினராக இருப்பது நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத சூதாட்டக் கூடத்தை நடத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு S$50,000 வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

