பதின்ம வயதில் இருந்த தமது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 30 வயது ஆடவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விதித்த அந்தத் தண்டனைகளை எதிர்த்து அந்த ஆடவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு குற்றம் நிகழ்ந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 13க்கும் 14க்கும் இடைப்பட்டு இருந்தது.
அச்சிறுமியிடம் தாம் எந்தவொரு பாலியல் செய்கையிலும் ஈடுபடவில்லை என்று தம் மீதான குற்றங்களை மறுத்த ஆடவர், அது குறித்து தீர விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கே-பாப் (K-pop) நிகழ்ச்சிகளைக் காணாதவாறு தொலைக்காட்சி ரிமோட் கருவியையும் கைப்பேசியையும் பறித்ததால் தம் மீது ஆத்திரமடைந்த சிறுமி, தமக்கு எதிராக பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் கூறியதாக ஆடவர் தெரிவித்துள்ளார்.
2021 செப்டம்பரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது, பல்வேறு பாலியல் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டதை காணொளியில் பதிவான வாக்குமூலத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், நீதிமன்றத்தில் அவற்றை மறுத்த ஆடவர், அந்த வாக்குமூலங்களைத் தாமாக முன்வந்து தெரிவிக்கவில்லை என்றும் அவற்றை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.
ஆயினும், தண்டனை விதித்த நீதிபதி மேவிஸ் சியோன், ஆடவரின் வெட்கக்கேடான நம்பிக்கைத் துரோகத்தையும் காவல்துறைக்கு எதிராகக் கூசாமல் பொய் கூறுவதையும் தாம் கவனித்ததாகக் கூறினார்.

