மலேசியாவில் மானிய விலையில் வழங்கப்படும் ‘ரோன் 95’ பெட்ரோலைத் தமது வாகனத்தில் நிரப்பிக்கொண்டே, சிங்கப்பூர் கடப்பிதழைக் காட்டி மலேசியர்களை வம்பிழுக்கும் வகையில் காணொளி வெளியிட்ட நபருக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
‘திபிளாக்ஸ்பைஸ்’ என்ற திரெட்ஸ் கணக்கில் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அந்த காணொளியில், “ஒரு சிங்கப்பூரராக மலேசியர்களை எப்படிக் கோபப்படுத்துவது? படி ஒன்று: அவர்களின் பெட்ரோலைத் திருடுங்கள்,” என்ற வாசகத்துடன் அந்த நபர் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் சிங்கப்பூர் கடப்பிதழைக் காட்டியவாறே, வெளிநாட்டு வாகனங்களுக்குத் தடைசெய்யப்பட்ட ‘ரோன் 95’ பெட்ரோல் நிரப்புவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
மலேசியாவில் ‘ரோன் 95’ என்பது அந்நாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அந்நாட்டு அரசாங்கத்தால் மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோல் ஆகும். வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட வாகனங்கள் மானியமில்லாத ‘ரோன் 97’ அல்லது ‘ரோன் 100’ பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்தக் காணொளி மலேசிய மற்றும் சிங்கப்பூர் இணையவாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “சொந்த நாட்டில் பெட்ரோல் போட பணமில்லாத ஏழைச் சிங்கப்பூரரை எப்படிக் கண்டறிவது? படி ஒன்று: மலேசியாவில் திருட்டுத்தனமாகப் பெட்ரோல் நிரப்புவதைப் பாருங்கள்,” என்று இணையவாசி ஒருவர் விமர்சித்துள்ளார். மேலும் சிலர், இந்த விதிமீறல் குறித்து மலேசிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆடவர் ஜோகூர் பாருவில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் ‘ரோன் 95’ பெட்ரோலை நிரப்பியிருக்கக்கூடும் என்றும் அவர் வேண்டுமென்றே பிறரது கவனத்தை ஈர்க்க சிங்கப்பூர் கடப்பிதழைக் காட்டியிருக்கக்கூடும் என்றும் இணையவாசி ஒருவர் பதிவிட்டிருந்தார்.

