பொது இடங்களில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் கட்டாய சிகிச்சை மேற்கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 வயது இயோ சி வேய், சிறைத்தண்டனைக்குப் பதிலாக மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வங்கி, நிதித்துறை பட்டதாரியான இயோ, இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது 'பைபோலார் அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர்' எனப்படும் மாறுபட்ட மனநிலைக்காக மனநலக் கழகத்திற்கு அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்செயல் நடந்தபோது இயோ ஆரோக்கியமான மனநிலையில் இல்லை என்று கழக மருத்துவரின் மதிப்பீட்டில் தெரியவந்தது. மாறுபட்ட மனநிலையால்தான் அவர் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும் மருத்துவர் குறிப்பிட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட இயோ ஆபத்தானவர் அல்லர் என்பதால் மனநல சிகிச்சைக்கு அவரை மருத்துவர் பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கிளமென்சி அவென்யூவில் உள்ள 'சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டரில்' வல்லந்தமாக நுழைந்தது, 10ஆம் தேதி தோ பாயோ வட்டார கார் நிறுத்துமிடத்தில் இருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றது ஆகியவை தொடர்பில் இயோ மீது குற்றம்சாட்டப்பட்டது. அதே நாளில் சுவா சூ காங்கிலும் அவர் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
மார்ச் 11ஆம் தேதி இயோ தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.


