தனது காரில் ‘பாமரெனியன்’ வகை நாய்க்குட்டிகளை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் கடத்திவந்த ஆடவருக்கு 16 வார சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாய்களைச் சட்டவிரோதமாகக் கடத்தியது, முறையான வகையில் அவை துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யத் தவறியது போன்ற பல குற்றங்களை பிரையன் பெ ஜியா ஹவ் என்ற 22 வயது ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நண்பர் காலர்ன் லிம் யுவான் ஜின் என்பவர், மலேசியாவில் இருந்து நாய்க்குட்டிகளை சிங்கப்பூருக்கு கடத்திவர விருப்பம் உள்ளதா என்று பிரையனை கேட்டுள்ளார். அவ்வாறு செய்தால் ஒவ்வொரு நாய்க்குட்டிக்கும் $250 முதல் $300 வரை கிடைக்கும் என்று லிம் கூறியுள்ளார்.
லிம் மற்றும் அவர் மனைவி இங் சியு டெங் என்பவரும், கடத்தப்படும் நாய்க்குட்டிகளை சிங்கப்பூரில் விற்கும் குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள்.
லிம் வழங்கிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அந்த மாதத்தில் பல கடத்தல்களை பிரையன் செய்துள்ளார். அவ்வாறு செய்துவரும் நிலையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி சிங்கப்பூருக்குள் வரும்போது, குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரி வழக்கமாக நடத்திய சோதனையில் பிரையன் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மருத்துவச் சோதனையில் நாய்க்குட்டிகளுக்கு சரியான காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற மரணம் விளைவிக்கக்கூடிய ஒருவித கிருமி பாதிப்பும் ஐந்து குட்டிகளுக்கும் தொற்றியிருந்தது.
தேசிய பூங்காக் கழக வழக்கறிஞர்கள், பிராணிகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவரத் தேவையான உரிமங்கள் குறித்த சட்டதிட்டங்களைக் குற்றவாளி புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
விலங்குகள், பறவைகள் சட்டப்படி, அவ்வகை உயிரினங்களை உரிமம் இல்லாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவருவோருக்கு $10,000 அபராதம், 12 மாதச் சிறை ஆகிய இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

