வாம்போ வெஸ்ட்டில் இருக்கும் கார் நிறுத்துமிடம் ஒன்றில் மற்றொரு நபரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர் மீது போதைப்பொருள் கடத்தியதாகப் பிப்ரவரி 4ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
சிங்கப்பூரரான 30 வயது யோ ஜி சியாங், எட்டோமிடேட் எனும் போதைப்பொருள் அடங்கிய 79 மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பிப்ரவரி 2ஆம் தேதி, வாம்ப்போ வெஸ்ட், புளோக் 34ல் உள்ள கார் நிறுத்துமிடத்தில் ஆடவர் மூவர் தகராறு செய்வதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறை அவ்விடத்திற்கு விரைந்ததாகச் சுகாதார அறிவியல் ஆணையம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், சந்தேக நபர் மற்றோர் ஆடவரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அச்சம்பவம் யோவிடமிருந்து எட்டோமிடேட் அடங்கிய மின்சிகரெட்டுகளை வாங்கியபோது நடந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் ஆணையம் கூறியது.
சம்பவத்தன்று, தகராறு செய்த ஆடவர்களைத் தடுத்துவைத்த காவல்துறை, யோவின் வேனைச் சோதனையிட்டது.
சோதனையில், அந்த வேனிலிருந்து மொத்தம் 80 மின்சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் போதைப்பொருள் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் ஆணையம் சொன்னது.

