சாங்கி விமான நிலையத்தில் மிரட்டும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர்மீது திங்கட்கிழமை (டிசம்பர் 9) தொல்லை கொடுத்ததன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர் விமானம் ஒன்றை விபத்துக்குள்ளாக்கப்போவதாகக் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மார்லி கர்டிஸ் பிலிப் மொன்கிரிஃப், 36, பெர்த் சென்றுகொண்டிருந்த ‘ஜெட்ஸ்டார் ஆஸ்திரேலியா’ விமானத்தில் நவம்பர் 20ஆம் தேதி காலை 5.40 மணிவாக்கில் ஏறினார்.
அப்போது, “விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் உயிரிழக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். விமானம் விபத்துக்குள்ளாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னதை விமானச் சிப்பந்தி ஒருவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காத்திருப்பு அறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், மீண்டும் அதே வார்த்தைகளைச் சொன்னதாகக் கூறப்பட்டது என்று காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
“நீங்கள் என்னை மற்றொரு விமானத்திற்கு மாற்றினாலும், நான் அதையே செய்வேன். விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன் என்று நான் விமானியிடம் கூறுவேன்,” என அவர் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடந்தவற்றைப் பற்றி காவல்துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், டிசம்பர் 18ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொல்லை கொடுத்தது தொடர்பில் சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், குற்றவாளி ஒருவருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.