பொதுப் பேருந்து மீது போத்தலை வீசி, கண்ணாடியை உடைத்த இளையருக்கு புதன்கிழமை (டிசம்பர் 24) ஏழு மாதங்களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பெண் பயணி ஒருவர் காயம் அடைந்தார்.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி குஸ்டாஸா கமரூதின், 38 மீது மூர்க்கத்துடன் நடந்து பெண் பயணியைக் காயப்படுத்தியதற்கும் திருட்டு, குறும்புச்செயலுக்கு தலா ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஏழு மாதங்கள், இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூவாயிரம் வெள்ளிக்கு மேல் இழப்பீடு செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 20 நாள்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும்.
சம்பவ நாளான ஜூலை 5 மாலை 5.30 மணியளவில் புக்கிட் பாஞ்சாங்கில் 190வது எண் ஈரடுக்கு பேருந்தில் ஏறிய அவர் மேல் தளத்தில் உட்கார்ந்துகொண்டார்.
பின்னர் சொஜு மதுபானத்தை அவர் குடித்துள்ளார். ஆர்ச்சர்ட் ரோடு த ஹீரன் கடைத் தொகுதியை அடைந்தபோது அவர் கீழே இறங்கி வந்தார். அப்போது லிம் பாங் காய், 60, அவரது 57 வயது மனைவி லிம் ஆகியோர் அவரை வழிமறித்து நின்றுகொண்டிருந்தனர்.
குஸ்டாஸாவுக்கும் லிம்முக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
குஸ்டாஸா கீழே இறங்கிச் சென்றபிறகு லிம்மும் அவரது மனைவியும் மேல் தளத்தில் உட்கார்ந்துகொண்டனர். லிம்மின் மனைவி சன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்து சந்திப்பில் பேருந்து நின்றபோது குஸ்டாஸா அவர்களை நோக்கி பார்த்துள்ளார். அப்போது லிம் ஆபாசமான முறையில் கைவிரலைக் காட்டியதாக நம்பப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குஸ்டாஸா கையிலிருந்த போத்தலை அவர்களை நோக்கி வீசினார். இதில் சன்னல் கண்ணாடி உடைந்து லிம்மின் மனைவிக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து லிம் காவல்துறையிடம் தெரியப்படுத்தியதால் ஜூலை 8ஆம் தேதி குஸ்டாஸா கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், போட் கீ அருகில் உள்ள கடையில் திருடிய குற்றத்தையும் செய்துள்ளார்.

