தன் காதலி தன்னைவிட்டுப் பிரிந்ததால் மிகவும் மனஉளைச்சலில் இருந்த ஆடவர், அந்த 20 வயது மாதை அப்பெண்ணின் வீட்டின் படுக்கையறையில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்தக் குற்றத்திற்காக அந்த 26 வயது ஆடவருக்கு 10 ஆண்டுகள், ஆறு வாரச் சிறைத்தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் தண்டனையாகத் திங்கட்கிழமை (ஜனவரி 20) விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு குற்றவாளியின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.
தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது, ஒருவரைக் கடுமையாகத் தாக்கியது, பிணையில் விடுவிக்கப்பட்டபோது அவரது கணுக்காலில் போடப்பட்ட மின்னணு கண்காணிப்புக் கருவியை வெட்டியது ஆகிய குற்றச்சாட்டை அவர் ஒப்புகொண்டார்.
பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாதைத் துன்புறுத்தியது என மற்ற இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது நீதிபதி கருத்தில் எடுத்துகொண்டார்.
தன்னுடைய இந்தச் செயலுக்கு அந்த மாதே காரணம் என அந்த ஆடவர் கூறிக்கொண்டே இக்குற்றத்தைப் புரிந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
மேலும், அந்த மாதைக் கன்னத்தில் பலமுறை அறைந்த அந்த ஆடவர், “இச்செயலை என்னை ஏன் நீ செய்ய வைத்தாய்?” என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேள்வியெழுப்பினார்.
அந்த மாதைப் பாலியல் வன்கொடுமை செய்வதற்குமுன், “இதைத் தானே நீ கேட்டாய்” என அந்த ஆடவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும்,“இவை அனைத்தும் உன் நன்மைக்காகவே,” என அந்த ஆடவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சொல்லியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நாம் மீண்டும் காதலர்களாக ஒன்றிணைய வேண்டும் என அந்த மாதிடம் அந்த ஆடவர் சொன்னார்.
2020ஆம் ஆண்டு இணையக் காதல் செயலியின் மூலம் சந்தித்த இருவரும் காதலர்கள் ஆகினர்.
கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் பிரிந்தனர். இதை ஏற்றுகொள்ள முடியாத அந்த ஆடவர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்புகொள்ள முயன்றார்.
தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாக கூறியும் விடாது அந்த மாதை அவர் தொந்தரவு செய்தார்.
அந்த ஆடவரின் தொல்லையைத் தாங்க முடியாத அந்த மாது “நாம் நண்பர்களாக நம் உறவைத் தொடரலாம்” என 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூறியுள்ளார்.
இருப்பினும், தனது சமூக கணக்குகளிலிருக்கும் நண்பர்கள் பட்டியலிலிருந்து அந்த ஆடவரைப் பாதிக்கப்பட்ட பெண் நீக்கியுள்ளார்.
இதனால், கோபமடைந்த அந்த ஆடவர் இக்குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

