சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிக்கு $30 லஞ்சம் தர முயன்ற ஆடவருக்கு வியாழக்கிழமை (மார்ச் 27) மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சீன நாட்டவரான வெய் ஷிஷான், 42, எனப்படும் அந்த ஆடவர் 2024 ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் வந்தார்.
சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவுக்கான முக அடையாளச் சோதனையில் அவர் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரைச் சோதிக்கும் விதமாக குடிநுழைவு அதிகாரி கேள்விகளைக் கேட்டார்.
எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, 10 நாள்கள் என்று கூறினார். ஆனால், அவரது வருகை அட்டையில் 29 நாள்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பயணத்திற்கான காரணம் ஓய்வு என்றார். பின்னர், தனி அறையில் விசாரித்தபோது வேலை செய்ய வந்ததாகக் கூறினார்.
சிங்கப்பூருக்குள் நுழைய தமக்கு அனுமதி மறுக்கப்படுமோ என்று அஞ்சிய அந்த ஆடவர், குடிநுழைவு அதிகாரியிடம் $30 நோட்டுகளை நீட்டி ‘காப்பி காசாக’ (coffee money) வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
அதன் பின்னர் அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

