கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றவருக்கு 8 மாதச் சிறை

2 mins read
50b2df84-032e-4b0d-86ba-d2af934e41b9
தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து $150,000க்கும் மேற்பட்ட கள்ளப் பணத்தை எடுத்த ஈவ்ஸ் சுவா ஜுன் பூனுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து $150,000க்கும் அதிகமான கள்ளப் பணத்தை எடுத்த ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பால் மாவும் அணையாடைகளையும் வாங்குவதற்காக ஈவ்ஸ் குவா ஜுன் பூன் எனும் அந்த 24 வயது ஆடவர் அந்த மோசடியில் ஈடுபட்டதாய்த் தெரியவந்தது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அவர் பல தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து $150,000க்கும் மேல் எடுத்தார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்ற குற்றச்சாட்டையும் கணினியைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் மற்றொரு குற்றச்சாட்டையும் குவா ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், குவாவின் தொடக்கப்பள்ளி நண்பர் வெய் ஜியான் (Wei Jian), தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து பணத்தை எடுப்பதன் மூலம் ஒரு நாளுக்கு $100 சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புப் பற்றி அவரிடம் சொன்னார்.

அதே மாதம் வெய் ஜியானும் குவாவும் மூன்று பெயர்களின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஏழு தானியக்க வங்கி இயந்திர அட்டைகள், சிம் (SIM) அட்டைகள், கைப்பேசி முதலியவற்றைப் பெறுவதற்காக ரயன் என்பவரைச் சந்தித்தனர்.

“பாதுகாப்பான வேலை” என்று ரயன் சுவாவுக்கு உத்தரவாதம் தந்தார். அனைத்துத் தானியக்க வங்கி இயந்திர அட்டைகளுக்கும் தனிமனிதர் அடையாள எண் (PIN) ஒன்றேதான் என்றும் ரயன் அவரிடம் சொன்னார்.

தவறான வழிகளில் ஈட்டிய பணத்தை எடுக்கப்போகிறோம் என்ற சந்தேகம் எழுந்தபோதும் சுவா அந்த வேலையைச் செய்துமுடித்தார்.

ஜூன் 25ஆம் தேதி அவர் உட்லண்ட்ஸ் குடிமை நிலையத்திலும் நீ ஆன் சிட்டியிலும் உள்ள தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து $151,280ஐ எடுத்தார். குவா குறைந்தது 20 தடவை முறைகேடாகப் பணத்தை எடுத்ததாய் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். நிதி மோசடிக் கும்பலின் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ள சியுவான் என்பவரிடம் நீ ஆன் சிட்டி கார்நிறுத்தும் இடத்தில் அவர் கொடுத்தார். பின்னர் காவல்துறையினர் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கார் நிறுத்தும் இடத்தில் மூவரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 151,280 வெள்ளி ரொக்கம் மீட்கப்பட்டது.

பணத்தில் $120 குறைவதாகச் சொன்ன சியுவான், அது சுவாவின் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்ளப்படும் என்று சொன்னார். அதன்படி சுவா அன்று செய்த மோசடி வேலைக்குக் கூலி எதுவும் கிடைக்கவில்லை.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயலும் குற்றத்துக்கு10 ஆண்டு சிறை, $500,000 அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிகள்ளப்பணம்சிறை